ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்டு இன்று வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் திரைப்படம் முத்து.
சரத்பாபு, மீனா, ராதா ரவி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் கடல் கடந்து பல வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டது. குறிப்பாக படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானிய மொழியில் “டான்சிங் ராஜா” எனும் பெயரில் வெளியான முத்து திரைப்படம், இன்று வரை அங்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. மேலும், ரஜினிகாந்த் உடன் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி அமைத்த இந்தப் படத்தின் பாடல்களும் மிகப்பெரும் ஹிட் அடித்தன.
சமீபத்தில் தமிழில் ரீ-ரிலீஸான முத்து திரைப்பத்தினை ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் இந்தியா வந்த ஜப்பானிய மூத்த அதிகாரி ஒருவர் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை உற்சாகமாகப் பாடி அசத்திய வீடியோ வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
புதுச்சேரி, மத்திய பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு வணிகத் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான கோபுகி சேன் என்பவர் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில் தமிழ் தனக்குப் பிடித்த மொழி, தமிழ் தனக்கு நன்றாகத் தெரியும், தமிழ் சினிமா பாடல்களை நன்றாகப் பாடுவேன் எனக் குறிப்பிட்டதுடன் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை தன் கொஞ்சும் தமிழில் பாடி அசத்தியுள்ளார். அரங்கம் அதிர அவர் பாடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
இந்நிலையில், இந்த வீடியோவைப் பார்த்து சிலாகித்து பாடலாசிரியர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
“ஒரு ஜப்பானியர்
77 வயது இளைஞர்
என் பாடலொன்றைப் பாடி
என்ன போடு போடுகிறார் பாருங்கள்
கடல் கடந்து மொழி கடந்து
இடம் கடந்து இனம் கடந்து
தடம்பதிக்கும் தமிழ்கண்டு
தடந்தோள் விரிகிறது நமக்கு
ஆடிப்பாடும் அவரோடு
கூடிப்பாடும் குழந்தையானேன்
இனி... நீங்களும்” எனப் பதிவிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
முத்து படத்தின் அனைத்து பாடல் வரிகளையும் வைரமுத்து எழுதிய நிலையில், இந்தப் படத்துக்காக தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதினை வைரமுத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.