எனக்குள் நிறைய உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்கிறேன் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி (Vijay Antony) தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி படம் ரிலீஸ்
வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, நடிப்புத்துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையை கொண்டுள்ளார். இவர் தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் மிருளாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியிருக்கும் ரோமியோவை இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நேர்காணலில் விஜய் ஆண்டனியிடம், அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளின் வலி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
‘மத்தவங்களுக்காக வாழறேன்’
அதற்கு, “என் வாழ்க்கையில் நிறைய இழப்புகள் நடப்பதை என்னால் உணர முடிகிறது. அதை ஈஸியாக கடக்கிறேன் எனவும் சொல்ல முடியாது. எனக்குள் நிறைய உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்கிறேன். இதுதான் வாழ்க்கை என நினைக்கும்போது வித்தியாசமாக இருக்கிறது. எனக்குள் இருக்கும் வலியை நான் யாருக்கும் கடத்தவில்லை. வலி என்பது வாழ்க்கையில் கண்டிப்பாக இருக்கும். அது இல்லாவிட்டால் நாம் மறத்து போய் விடுவோம். வலியில்லாமல் எதுவும் உருவாகிவிட முடியாது. அது வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். வலி இல்லாமல் மகிழ்ச்சியை தெரிந்துக் கொள்ள முடியாது.
வாழ்க்கை பற்றிய புரிதல்
வாழ்க்கையை கண்டிப்பாக யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. வாழ்க்கையை நாம் குறிப்பிட்டு புரிந்துக் கொள்ள முடியாது. வேறு வழியில்லாமல் நாம் வந்துவிட்டோம். வாழ்க்கையைப் பற்றிய புரிதல் பற்றி இப்படி ஆய்வு செய்தால் முடிவு கிடைக்கும் என சொன்னால், நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயார். தனி மனிதன் என்றே ஒன்று இல்லை. பல பேரின் பொறுப்பை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். பலருக்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள். நான் பண்ணும் வேலையெல்லாம் பிடித்து பண்ணுவேன் என்பது இல்லை. பிடிக்காமல் கூட செய்வேன். என்னவொன்று பிடிக்காமல் பண்ணும்போது இரண்டு மடங்கு சின்சியராக இருப்பேன்”என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.