4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித் தேர்வில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு, ஏப்ரல் 24ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் இயங்கும் அனைத்து அரசு/ அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10, 12 ஆகிய தேதிகளில் முறையே அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன.
ரம்ஜான் பண்டிகையால் ஒத்திவைப்பு
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள், முறையே ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா அந்த சமயத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்
இதை அடுத்து, ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தத் தகவலை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
முன் கூட்டியே தேர்வுகள்
முன்னதாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 18 முதல் 30ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டன.
ஏப்ரல் 13 முதல் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வுகள் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.