பிரபல இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் மறைமுகமாக இயக்குநர் ஒருவரை தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷான் ரோல்டன். அதனைத்தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’, ‘முண்டாசுப்பட்டி’ ஜோக்கர், தனுஷ் இயக்கிய ப.பாண்டி, வேலை இல்லாத பட்டதாரி 2, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அவர் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.
இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “ என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சிந்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது.
சிந்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்.” என்று பதிவிட்டு இருக்கிறார். ஷான் ரோல்டனின் இந்தப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப்பதிவின் மூலமாக இயக்குநர் ராஜூமுருகனை அவர் தாக்கியிருப்பதாக சமூகவலைதள வாசிகள் பேசி வருகின்றனர்.
சரி ஷான் ரோல்டனின் இந்த கொந்தளிப்புக்கு என்ன காரணம் என்று விசாரிக்கும் போது, கார்த்தி நடிக்கும் அடுத்தப்படத்தை இயக்குநர் ராஜூமுருகன் இயக்க உள்ள நிலையில், அதில் யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருப்பதே ஷானின் இந்த அதிருப்திக்கு காரணம் என திரை வட்டாரங்கள் பேசி வருகின்றன.
முன்னதாக ராஜூ முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். அதே போல ராஜூ முருகனும் ஷான் இசையமைத்த ப.பாண்டி, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.