James Vasanthan:கர்த்தர் பெயரை வைத்து வெளிப்படையான மோசடி நடப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து சுப்பிரமணியபுரம் படம் மூலம் இசையமைப்பாளராக ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானார் ஜேம்ஸ் வசந்தன். தொடர்ந்து பசங்க, நாணயம், ஈசன் போன்ற சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். அதேசமயம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இவரின் “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் அடையாளப்படுத்தியது. இப்படியான ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது பல்வேறு விஷயங்களை விமர்சித்து பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம்.
அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்கள் என யாரையும் அவர் விமர்சிக்க தவறியதே இல்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய ஜேம்ஸ் வசந்தன் அதற்கான விமர்சனங்களையும் இணையவாசிகளிடம் இருந்து பெறுவார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் குறித்து தனது கருத்துகளை கூறியிருந்தார். மேலும் கிறிஸ்தவ போதகரான பால் தினகரனின் மனைவி இவாஞ்சலின் பேசிய சுவிஷேச வீடியோ கேலிக்குள்ளானதை குறிப்பிட்டு கடுமையான பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் சுவிசேஷ வீடியோவை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் ஒரு பெண், ஜெபக்கூட்டத்தில் பங்கேற்றவர்களின் நகைகளை எல்லாம் கேட்டும் ஆறே மாதத்தில் தேவன் டபுளாக தருவார் என்ற ரீதியில் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ஜேம்ஸ் வசந்தன், “இந்த அம்மா மேல வர்ற கோபத்தைவிட அங்க உக்காந்துருக்குதுங்க பாருங்க ஒரு கூட்டம். அதுங்க மேலதான் அதிகக் கோபம் வருது. இதுங்கதான் இந்தமாதிரி ஏமாத்துக்காரப் பசங்களை வளர்த்துவிடுதுங்க.
இந்த அம்மா இப்படி பேசுறதுக்குக் காரணம் சில நட்சத்திர சுவிசேஷகர்தான். அவங்க அப்படி பேசுனதுக்கு அப்புறம் ரொம்ப பிரலமாயிட்டாங்க. அதனால் மக்கள் இப்படிப் பேசுறவங்களைத்தான் ரொம்ப விரும்புறாங்கன்னு தெரிஞ்சு, மோசடிகளை வெளிப்படையாகவே உரிமையோட செய்யத் தொடங்கிட்டாங்க.
இதுல வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, கர்த்தருடையை பேரையும், வேத வசனங்களையும் இந்தக் கொள்ளையில் சேத்துக்குறதுதான். பிற நம்பிக்கைகளிலிருந்து உண்மையான மனமமாற்றத்துடன் வருகிற பலரும் இதை நம்பி மோசம் போவது அதைவிட வேதனை.அரசியலில்தான் ஏமாத்துக்காரர்கள்னு பாத்தா கிறிஸ்தவத்தில் அவர்களை மிஞ்சிவிடுகிறார்கள் பல கள்ளப் போதகர்கள்.இதை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தது யாரென்று நம் எல்லோருக்கும் தெரியும்!” என காட்டமாக தெரிவித்துள்ளார்.