என்னை நான் இசைஞானி என நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன் என நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். 


சென்னை தி.நகரில் நடைபெற்ற ஆண்டாள் திருப்பாவை புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசிய கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


அதாவது, “மக்கள் என்னை இசைஞானி என நினைக்கின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன். எனக்கு மொழி அறிவு, இலக்கிய அறிவு என எதுவும் கிடையாது. புத்தக வெளியீட்டுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். நான் முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைத்தேன். அந்த படம் பின்னணி இசைக்காக என்னிடம் வருகிறது. அதில் முதல் ரிலீல் ஹீரோயின் அறிமுக காட்சி. அவர் ஆண்டாள் நடனத்தை பார்ப்பது போன்ற காட்சிக்கு நான் இசையமைத்தேன். அதனால் ஆண்டாள் எனக்கு முதல் படத்திலேயே அருள் புரிந்து விட்டாள் என நினைத்துக் கொண்டேன். 


நான் ஒரு சிவ பக்தன். அதற்காக சைவத்தை மட்டும் பின்பற்றுபவன் அல்ல. திவ்ய பிரபந்ததை ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளேன். சரியான நேரத்தில் வெளியிடுவேன். அப்போதெல்லாம் மாதத்தில் 30 நாட்களும் எனக்கு வேலை இருக்கும். அப்போது காலை 7 மணி முதல் பகல் 1 மணி ஒரு கால்ஷீட் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கால்ஷீட் என்பது இல்லை. இரவு பகல் பாராமல் வேலை செய்கிறார்கள். 1 பாட்டுக்கு இசை அமைக்க 6 மாதம் ஆகிறது. ஒரு வருஷம் கூட எடுக்கிறார்கள். அதில் சாதனை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு வரவில்லை அவ்வளவு தான். 


நான் கர்நாடகா சங்கீதத்தில் கரை கண்டவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என கேட்டால் அதுவே கேள்விக்குறி தான். மக்கள் என்னை அப்படி அழைக்கிறார்கள். அதற்காக நன்றி, நான் என் கர்வத்தை எல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்து விட்டேன். என் அண்ணனோட கச்சேரி வாசிக்கிற நேரத்துல மக்களின் கைதட்டலை பார்த்து பெருமையா இருந்தது. அதனால் நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். கைத்தட்டல் அதிகரிக்க அதிகரிக்க என் கர்வமும் அதிகரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்த கைதட்டல் எல்லாம் எதுக்கு கிடைக்கிறது என கேள்வி எழுந்தது. இசைக்காக தான் கிடைக்கிறது.


நான் பிரபலமான சினிமா பாடல்களை வாசிப்பேன். அதனை யார் இசையமைத்தார் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போ பாராட்டு எல்லாம் அவருக்கு தான் போகிறது என நினைக்கையில் கர்வம் போய் விட்டது. அதனால் எந்த புகழும், பாராட்டும் என்னை ஒட்டாது. அதில் எனக்கு சிந்தனையும் கிடையாது.நான் ஒரு நாளைக்கு 3 பாடல்கள் பதிவு செய்வேன். 3 நாட்களில் 3 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளேன். இது என்னுடைய திறமையை சொல்வதற்காக சொல்லவில்லை. அப்படி இசையமைத்தவர்கள் இந்த உலகத்திலேயே கிடையாது. படக்குழுவினரின் நெருக்கடி அப்படி இருந்தது” என இளையராஜா  தெரிவித்துள்ளார்.