விருமன் இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன்சங்கராஜ் பேசினார். அப்போது, பள்ளி காலத்தில் தனக்கும் நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட மோதல், நட்பு குறித்து பேசியிருந்தார். இதோ அது...




‛‛எனக்கு பேசவே தெரியாது. சூர்யாவுக்கும் கார்த்திக்கும் ரொம்ப நன்றி. ரொம்ப நாளைக்கு அப்புறம் நாம சேர்ந்து படம் பண்றோம். ரிரெக்கார்டிங் போயிட்டு இருக்கு. இன்று அல்லது நாளைக்குள் முடித்து விடுவேன். வேறு என்ன சொல்வதுனு தெரியலை. 


முத்தையா உடன் சேர்ந்து முதல் முறையாக இசையமைத்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. அதிதி உள்ளிட்ட எல்லோரும் நல்லா பண்ணிருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. படம் நல்லா போகும். இங்கே வருவதற்கு முன்பு கூட நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி தான், பள்ளி காலத்தில் இருந்து பழகி, இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து, இவ்வளவு பேர் அன்பை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பது பெரிய விசயம் தான். 


எல்லாத்தையும் தாண்டி இறைவனோட ஆசி வேண்டும். அது சூர்யா, கார்த்திக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு எனக்கும் அவர்கள் மீது இருக்கிறது. எங்கள் பயணம் மிக நீளமானது. பள்ளி காலத்தில் இருந்து நான் அவர்களுடன் பயணிக்கிறேன். இயற்கையாகவே, நான் இந்த படத்திற்கு ஹிட் அடிக்கணும் அப்படியெல்லாம் மியூசிக் போடல. நேர்மையாகவே அவ்வளவு முயற்சி எடுக்கல. நல்ல பாட்டு போடணும், எல்லாருக்கும் பிடிக்கணும் தான் மியூசிக் போட்டேன். அப்படி தான் கஞ்சாப் பூ கண்ணால பாட்டு முதலில் ட்யூன் போட்டேன். அதை கேட்டதும், சார் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாரு. சித் ஸ்ரீராம் அதை பாடினார். இதுக்கு முன்னாடி பண்ண ஹிட் பாடல்களும் இப்படி தான் உருவானது. 


பள்ளி கால நினைவுகளை பேசிக்கொண்டிருந்தேன். பள்ளியில் என்னோட கிளாஸ் கேப்டன் சூர்யா தான். நான் ஆடை அணிவதில், ஷூ அணிவதில் முறையாக இருக்க மாட்டேன். ஆனால், சூர்யா பக்காவா சீருடை, ஷூ எல்லாம் போட்டு வருவார். நேரா என்னிடம் வருவார், ‛யுவன்... அவுட்...’ என கூறுவார். நானும் ,‛ஓகே...’ எனவகுப்பை விட்டு வெளியே போய்விடுவேன். பள்ளியை 3 ரவுண்ட் அடிக்கணும். 


(குறுக்கிட்ட சூர்யா, ‛பதிலுக்கு பாடல்களை கொடுத்து என்னை யுவன் ஆட வைத்தார்’ என, கீழே இருந்து கூற, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது)




ஆமா, நான் பாட்டுக் கொடுத்து சூர்யாவை ஆட வைத்தேன். செனோரிட்டா மாதிரி நிறைய பாடல்களை கொடுத்து அவரை நான் ஆட வைத்தேன். ‛என்னை ஓடவா விட்ட... இந்த ஆடுனு’ ஆட வைத்தேன். அதோடு கார்த்தி, சூர்யாவை பாட வைத்தேன். பிரியாணி படம் அப்போ கார்த்தி பாடியதை கேட்ட போது, அவரை பாடலாம் என தோன்றியது. அஞ்சானில் அப்படி தான், ‛ஏக் தோ த்தீன்’ என சூர்யாவை பாட வைத்தேன். இத்தோடு முடியாது, இன்னும் அவர்களை பாட வைக்க வேண்டும்.


‛ட்ரெக் டீலர்’ என எனக்கு மீம்ஸ் போடுவதை பார்க்கிறேன். இசையால் இணைந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன். இசையால் அனைவரிடமும் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியே. மதுரை போறேன் என்றதுமே, இந்த ஆடை தான் போடணும் என என் மனைவி தான் கூறினார். இப்போது நான் எங்கு சென்றாலும் எனது ஆடையை தீர்மானிப்பது என் மனைவி தான். மதுரையில் விரைவில் ஒரு இசை விழா செய்யலாம். கூடிய விரைவில் மதுரையில் எனது இசை நிகழ்ச்சி நடைபெறும்,’’ என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.






யுவன் பேசிய பின் மேடையில் பேசிய சூர்யாவும் அதை நினைவூட்டினார், நான் ஓட வைத்ததற்காக யுவன் என்னை ஆட வைத்தார். ‛நான் கேட்டேன்... யேய் என்ன இப்படி பாட்டு போட்ருக்க... நான் எப்படி ஆடுவேன்னு...’ , அந்த அளவிற்கு யுவன் என்னை ஆட வைத்து விட்டார், என்று யுவனுடனான பள்ளி காலத்தை நினைவூட்டினார் சூர்யா.