நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை கொண்டுள்ளார். 


மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 


குடும்பப் பிரச்னை காரணமா?


இந்நிலையில்,  ஆயுதப்படை காவலர் செந்தில் குமார் குடும்பப் பிரச்னை காரணமாக தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.


மதுரை மாவட்டம், செல்லூர், சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த பிச்சை - ஜெயந்தி மாலா தம்பதியினரின் மகன் செந்தில் குமார், நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் கடந்த, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்தார்.


இவருக்கு திருமணம் ஆகி, உமா தேவி என்கிற மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இவர் எழும்பூர் கெங்கு தெருவில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.


நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்கொலை


நேற்று இவர் நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் அரங்கில் உள்ள கழிவறை பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.


இதனையடுத்து சக காவலர்கள் விரைந்து சென்று கழிவறைக் கதவை உடைத்த உள்ளே சென்று பார்த்தபோது, செந்தில் குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.


அவரது வலதுபுற நெஞ்சில் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் செந்தில் குமார் சுட்டுக்கொண்ட நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில் குமார், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரிய மேடு காவல் துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக செந்தில் குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


முன்னதாக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்குபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


காவலர் செந்தில் குமார் தன்னைத் தானே சுட்டுக்கொண்ட காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இக்காட்சிகள் குறித்தும் மன அழுத்தத்தால் காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண