பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வடசென்னை 2 ஆம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்தது. வடசென்னையில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வடசென்னை படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 


குறிப்பாக பிளாஸ்பேக் காட்சியில் வரும் அமீர் நடித்த ராஜன் கேரக்டர் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. மேலும் படமும் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டத்துடன் முடிவடைந்திருக்கும். ஆனால் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 2 ஆம் பாகம் இதுவரை எடுக்கப்படவில்லை. 


ரசிகர்கள் எங்கு சென்றாலும் வடசென்னையின் 2 ஆம் பாகம் குறித்து கேட்டு வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு தனுஷ் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். வெற்றிமாறனும் அசுரன், விசாரணை முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படங்களை முடித்து விட்டார். அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் எடுக்க உள்ளார். இதை முடித்து விட்டே வட சென்னை 2 படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 


இதனிடையே நேர்காணல் ஒன்றில் வடசென்னை படம் குறித்து பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘இந்த படத்தில் இடம்பெற்ற அமீரின் ‘ராஜன்’ கேரக்டரை மையமாக வைத்து ‘ராஜன் வகையறா’ என்ற படம் ஒன்றை வைத்துள்ளார். செம படம் அது. எல்லோரும் அவருக்கிட்ட சொல்லுங்க. ராஜனின் வாழ்க்கை தான் அந்த கதையாகும். கிட்டதட்ட 2 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருக்கும். வடசென்னையை விட ராஜன் வகையறா ரொம்ப பெட்டரா இருக்கும்ன்னு நானே சொல்வேன் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மேலும் படிக்க: Vadachennai 2: "இப்போதைக்கு வடசென்னை 2-ஆம் பாகம் இல்லை” - உறுதியான தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்