மறைந்த முதலமைச்சர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவில் தற்போது, 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திமுகவின் புதிய இணையதளம்:


திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளமான,  dmk.in -ஐ கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட DMK.in கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்!” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


புதுப்பொலிவில் கட்சி இணையதளம்:


புதிய கட்சி இணையதளம் தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “திராவிட இயக்க வரலாறு தலைவர்களின் போராட்டங்கள் - தியாகங்கள், திமுக ஆட்சி கால சாதனைகள், அரிய புகைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் அன்றாட செயல்பாடுகள் - சாதனை திட்டங்கள், கழக உறுப்பினர் சேர்க்கை, தொண்டர்கள் உடனான தொடர்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது. 






2 கோடி தொண்டர்கள்:


புதிய இணையதள பக்கத்தில் திமுக தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள், 23 சார்பு அணிகள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1.5 கோடி தொண்டர்களுடன் தமிழகத்தில் அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான் என கூறப்பட்டு வருகிறது. தற்போது அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, 2 கோடி தொண்டர்களுடன் அந்த பட்டியலில் திமுக முதலிடம் பிடித்துள்ளது.


உறுப்பினர் சேர்க்கை தீவிரம்:


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாகவே நிர்வாகிகள் உடன், திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் உடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்த வேண்டும் எனவும், முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவிற்கு முன்பாகவே தொண்டர்களின் எண்ணிக்கை 2 கோடியை எட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். இதனால், திமுகவின் உறுப்பினர் சேர்க்கை என்பது அதிதீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தான், திமுக கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ளதாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.