தெலுங்கு திரையுலகின் மிகப் பிரபலமான இசையமைப்பாளரான எம்.எம். கீரவாணி, இன்று  ஆஸ்கர் நாயகனாக மாறி பாராட்டுகளைக் குவித்து வருகிறார். இன்று ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு... பாடல் மூலம் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக போற்றப்படும் ஆஸ்கர் விருதை பெற்று தெலுங்கு தேசம் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகுக்கே பெருமை சேர்த்துள்ளார்.


 




 


தொடங்கியது இசை பயணம் :


ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ள இந்த இசைக்கலைஞனின் திரைப்பயணம் 1990ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் மரகதமணி என்ற பெயரிலேயே அறியப்படும் இவரது முழுமையான பெயர் கொடூரி மரகதமணி கீரவாணி.


தமிழ் சினிமாவில் இவரின் இசை ஒலிக்கத் தொடங்கியது இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் 'அழகன்' திரைப்படத்தில் தான். அழகன் படத்தின் ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட் பாடல்கள். 'சாதி மல்லி பூச்சரமே...', 'சங்கீத ஸ்வரங்கள்...' என மெலடி பாடல்களாக இருக்கட்டும், அல்லது 'கோழி கூவும் நேரம்...', 'துடிக்கிறதே நெஞ்சம்...' என துள்ளலான பாடலாக இருக்கட்டும்... ”யாருடா இது புதுசா இருக்கே” என அனைவரின் கவனத்தை ஒரே படத்தின் மூலம் அவர் பக்கம் திருப்பி தனக்கென ஒரு அழுத்தமான முத்திரையை பதித்தவர் கீரவாணி! 






ஆஸ்தான இசையமைப்பாளர் :


இந்த வெற்றி மீண்டும் அவரை பாலச்சந்தரின் 'வானமே எல்லை' திரைப்படத்தில் இணைத்தது. அதன் மூலம் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராகக் கலக்கினார். மேலும் 'நீ பாதி நான் பாதி', 'ஜாதி மல்லி', 'கொண்டாட்டம்', 'சேவகன்' என ஏராளமான திரைப்படங்களின் மூலம் நமது நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் கீரவாணி.


இவர் இசையமைத்த ஒரு சில படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் பேசப்பட்டன. அதற்கு உதாரணம் ஸ்ரீதேவி - அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான 'தேவராகம்' பட பாடல்கள். தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் இவரின் இசை ரசிகர்களை மயக்கியது. 






எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கம் :


இன்று வரை தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் கீரவாணி 1997ஆம் ஆண்டு வெளியான 'அன்னமய்யா' திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். நந்தி விருதுகள் மற்றும் பிலிம் ஃபேர் விருதுகளை கைப்பற்றியுள்ள கீரவாணி ஒரு படலாசிரியராகவும், பாடகராகவும் முத்திரை பதித்துள்ளார்.


உலக சாதனை படைத்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் மூலம் சர்வதேச அளவில் கவனிப்பைப் பெற்ற கீரவாணி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கித்தில் வெளியான அனைத்து படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் இடையில் வேறு ஒரு தொடர்பும் உள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலியும் இசையமைப்பாளர் கீரவாணியும் உறவுக்காரர்கள்ம், சகோதரர்கள்.


தெலுங்கில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியான 'நான் ஈ', 'மாவீரன்', 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படங்களின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் விருப்ப இசையமைப்பாளராக உருவெடுத்தார். வரும் காலங்களில் மேலும் பல பல அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்து இன்னும் சர்வதேச அளவில் கொடிக்கட்டி பறந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு வாழ்த்துகள்!