பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் சாஹோ. இந்தப் படத்தை இயக்குநர் சுஜித் இயக்கி இருந்தார். இப்படம் சுமார் 433 கோடி வரை வசூல் வேட்டை செய்து பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் சாஹோ தீம் மியூசிக் இடம்பெற்று இருக்கும். அது நன்றாக இருக்கும். ஆனால் இப்படத்தில் வரும் இசைக்கு முன்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் வேறு ஒரு மியூசிக்கை தீம் பாடலாக போட்டுள்ளார். எனினும் காட்சியமைப்புகளுக்கு ஏற்றவாறு இல்லாததால் அதை அவர் மாற்றியுள்ளார். 


இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணத்திற்கு திரைப் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களின் உதவியை அளித்து வருகின்றனர். அந்தவகையில் தன் பங்கிற்கு இசையமைப்பாளர் ஜிப்ரானும் உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்.இந்த விற்பனை தொடர்பாக ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் செய்துள்ளார்.  இதற்காக வெளிவராத அந்த சாஹோ தீம் மியூசிக் பாடலை வைத்து என்.எஃப்.டி முறையில் நிதி திரட்ட ஜிப்ரான் முடிவு எடுத்துள்ளார். இதன் மூலம் வரும் பணத்தில் 50 சதவிகிதத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க திட்டமிட்டுள்ளார்.மீதமுள்ள 50 சதவிகிதத்தை கொரோனா பாதிப்பு தொடர்பாக மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வரும் இசை கலைஞர்களுக்கு உதவ போவதாக அவர் தெரிவித்துள்ளார்.






என்.எஃப்டி என்றால் என்ன? அதில் எப்படி பொருள் விற்கப்படுகிறது?


Non-Fungible Token என்ற என்.எஃப்.டி (NFT) ஒரு டிஜிட்டல் சந்தை விற்பனை முறையாகும். இது கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் முறையாகும். இதன் மூலம் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய முடியும். இந்த முறையில் நிழற்படங்கள், ட்வீட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த முறைப்படி பொருட்களை விற்று வந்தனர். இந்த முறைப்படி பொருளை வாங்க நினைப்பவர்கள் அதற்கான விலையை நிர்ணயிக்கலாம். இந்த முறையில் பொருளுக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு அப்பொருள் விற்கப்படும். கிட்டத்தட்ட ஏல முறையை போல் இதில் பொருட்களை வாங்க முடியும். தற்போது முதல் முறையாக இந்த பிளாக் செயின் டிஜிட்டல் முறையில் இசையை விற்பனை செய்ய ஜிப்ரான் திட்டமிட்டுள்ளார்.


மேலும் படிக்க: Family Man 2 | வரலாற்றை கொச்சைப்படுத்தியது Family Man 2 : கொதித்த பிரபல இயக்குநர்!