இன்றைக்கு கானா என்னும் சென்னை வாழ் மக்களில் பாடலுக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக இன்றைய 2k கிட்ஸ்களை கானா பாடல்கள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால் கானா பாடல்கள் திரையில் ஒலிக்க முன்னோடியாக இருந்தவர் தேனிசை தென்றல் தேவா. சென்னையை பூர்வீகமாக கொண்ட தேவா , தான் வளர்ந்த சூழலில் இருந்து பாடல்களை உருவாக்கினார். அது இன்றைக்கு கொண்டாடப்பட்டாலும் , அவரது ஆரம்ப நாட்கள் அவ்வளவு கொண்டாட்டமாக இல்லை. நிறைய அவமானங்களும் விமர்சனங்களும் தன்னை துரத்தியதாக வெளிப்படையாக சித்ரா லக்ஷ்மணுடன் பகிர்ந்துள்ளார் தேவா.
அதில் ” ஒவ்வொரு தடங்கள் வரும். பத்திரிக்கைகளில் நிறைய தடங்கள்கள். யாருமே என்னை இசையமைப்பாளராக ஒப்புக்கொள்ளவே இல்லை. அண்ணாமலை படத்தின் பாடல்கள் நல்ல பாடல்கள்தானே .. அதனை விமர்சித்தவர்கள் படம் அண்ணாமலை , பாடல் விஷயத்தில் தம்பி மலைகூட இல்லை என்றார்கள் . அதேபோல பாட்ஷா படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் , ஆனால் விமர்சிக்கும் பொழுது ச்சீ..ச்சீ என எழுதினார்கள். நான் அப்போது ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்வேன். நாம் இப்போது இமயமலை நோக்கி பயணிக்கிறோம். கால்களில் தட்டுப்படும் சிறு கற்களை எல்லாம் கவனிக்கக்கூடாது என்பதுதான். கந்த சஷ்டி கவசத்தை காப்பி அடித்ததாக கூறினார்கள்.
ஆனால் அந்த படத்தில் ரோஜா அந்த பாடலை கேட்பதாக காட்சி வைத்திருந்தார்கள். அதனால்தான் அப்படியான ரிதமில் பாடல் வேண்டும் என இயக்குநர் கேட்டதால் உருவாக்கினோம். ஆனால் எடிட்டிங்கில் அந்த காட்சியை நீக்கிவிட்டார்கள் , நேரடியாக 18 வயது பாடல் தொடங்கிவிட்டது. பழி ஒரு பக்கம் , பாவம் ஒரு பக்கம் என்றாகிவிட்டது. படங்களுக்கு ஸ்கிரீன் பிளே எவ்வளவு அவசியமோ அதே போலத்தான் பாடல்களுக்கும். ஆரம்பத்தில் என் பாடல்கள் விமர்சிக்கப்பட்டாலும் , மறுபடி மறுபடி கேட்டார்கள். நான் புதிதாக ஆடாதடா , ஆடாதடா மனிதா...கவலை படாதே சகோதரா என வித்தியசமாக பாடல்களை கொடுத்ததும். இது என்ன பாட்டு சார் என கேட்டார்கள் .
நான் கானா பாட்டு என்றேன். இந்தியில கானா என்றால் பாட்டு என்றுதான் அர்த்தம். இந்து என்னும் படத்துல முழு பாடல்களும் கானா ஸ்டலிலேயே போட்டேன். கானா பாடல் என்பது சென்னை வாழ் மக்களுக்கானது. குடிசை வாழ் பகுதிகளில் வாழ்ந்து , வளர்ந்தால்தான் பாட முடியும். அது கிட்டத்தட்ட ரௌடி ஸ்லாங்காக இருக்கும். எஸ்.பி.பி சார் கேட்டார் இந்த ஸ்லாங்கை எப்படி உருவாக்கினீங்கன்னு. நான் சொன்னேன் அதற்கு இங்கேயே வாழ்ந்திருக்கனும் சார்னு. என் கானா பாடல்களை மற்ற இசையமைப்பாளர்கள் தப்பா பேசினாங்க. இதல்லாமா ஒரு பாட்டு , கேட்க லோக்கலா இல்லை என கிண்டல் பண்ணாங்க. நானும் ஒரு இசையமைப்பாளரும் அண்ணன் தம்பியாக ஆரத்தழுவி பழகியிருக்கிற்ஓம். ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அவருக்கு வணக்கம் வைத்தேன். அவர் கண்டுக்கொள்ளவில்லை. மூன்று முறை வணக்கம் வைத்தும் கண்டுக்கொள்ளவில்லை. அதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை ” என வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார் தேவா.