நாள்தோறும் ஏதாவது ஒரு புகைப்படமோ, வீடியோவோ, சம்பவமோ இணையதளத்தில் வைரலாவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், நேற்றிரவு முதல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஒரு புகைப்படம். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானும், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்து எடுத்து கொண்ட அந்த புகைப்படம்தான் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது.
இளையராகாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந்திய சினிமாவின் இசை ஜாம்பவான்களாக திகழ்பவர்கள். தமிழ் மட்டுமின்றி வெவ்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கும் இவர்கள் சந்தித்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. துபாய் எக்ஸ்போ 2020 பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்தும் பல முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், பெண் இசைக்கலைஞர்களை கொண்டு ஃபிர்டோஸ் ஸ்டுடியோ என்ற இசை குழுவை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த குழுவோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தினார். துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவும் நிகழ்ச்சி நடத்தினார். இந்நிலையில், துபாயில் இருக்கும் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மானின் ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். “ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு மேஸ்ட்ரோவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஃபிர்டோஸ் ஸ்டுடியோவிற்காக விரைவில் அவர் இசையமைப்பார் என எதிர்ப்பார்த்து இருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகை சர்தா ஸ்ரீநாத், பாடகி ப்ரியங்கா உள்ளிட்டோர் ரஹ்மானின் பதிவில் கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்