நீயா நானா
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஒருபக்கம் பள்ளி இன்னொரு பக்கம் வாழைத்தார்களை சுமக்கும் கூலி தொழிலாளியாக தான் இருந்த கதையை உணர்ச்சிவசமான ஒரு படமாக இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் பல்வேறு விவாதத்தை சமூக வலைதளங்களில் தொடங்கி வைத்துள்ளது. இந்த படத்தையொட்டியே இந்த வார நீயா நானா நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. சிறுவர்கள் ஒரு பக்கம் படித்துக்கொண்டு இன்னொரு பக்கம் தங்கள் குடும்ப சூழல்களை சமாளிக்க கூலி தொழில்களாக வேலை செய்யும் பல்வேறு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாணவனுக்கு இரு சக்கர வாகனம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு மாணவர்களின் கதைகள் அனைவரையும் உணர்ச்சிவசப் படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் சிறு பகுதிகளை சமூக வலைதளங்களில் பகிரப்படு வருகின்றன. மாணவர் ஒருவர் தனது அம்மாவிற்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக தான் கூலி வேலைக்கு செல்வதாகவும் . வேலைக்குச் சென்று சில நேரங்களில் பேருந்தை தவறவிட்டுவிட்டால் 3 கிலோமீட்டர் நடந்தே வீட்டிற்கு சென்றுவிடுவேன் என பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் தமன் இந்த மாணவனுக்கு உதவும் வகையில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி தர இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்