தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக இருந்தவர் மணிசர்மா. விஜய் நடிப்பில் வெளியான யூத், போக்கிரி, திருப்பாச்சி பாடல்கள் மட்டுமின்றி மலைக்கோட்டை, மாப்பிள்ளை, ஏழுமலை, அரசு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். தமிழை விடவும் தெலுங்கில் தான் அதிக அளவிலான படங்களுக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் மகேஷ் பாபு, பவன் கல்யாண் படங்கள் தான் ஏராளம். கன்னடம், இந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


 



குறைந்த வாய்ப்பு :


2000ஆம் ஆண்டு வரை முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த மணிசர்மா 200 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தால் அவரின் இசையைக் கேட்க முடியாமல் போனது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட மணிசர்மா மிகவும் வேதனையும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


ஓரம் கட்டிய மகேஷ் பாபு :


மகேஷ் பாபுவும் நானும் சகோதர்கள் போல பழகுவோம். ஆனால் இன்று அவருடன் உட்கார்ந்து 2 பெக் கூட குடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவரை நான் சந்திப்பதே இல்லை. வேலை நிமித்தமாக அல்ல என்றாலும், நட்பு முறையில் கூட சந்தித்து கொள்வதில்லை. அவருக்கு நான் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளேன். அப்படி இருக்கும் போதே என்னை ஓரம் கட்டிவிட்டார்.


நட்பை மறந்த பவன் கல்யாண் :


அதே போல பவன் கல்யாணும் நானும் மிகவும் நெருக்கமாக பழகுவோம். அவர் நடித்த குஷி, குடும்பா சங்கர் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு நான் இசையமைக்கும் போது அவர் என்னுடன் ஸ்டுடியோவில் தான் படுத்துக்கொண்டு நாவல் படிப்பார், தூங்குவார். ஆனால் இன்று நான் அவரை சந்தித்தே பல ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் என்னை புறக்கணிப்பதாக நான் உணர்கிறேன். 


வாய்ப்பு தரவில்லை :


பவன் கல்யாண், மகேஷ் பாபு போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு அவரின் படங்களில் இசையமைப்பவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது. அப்படி இருந்தும் அவர்கள் சம வாய்ப்பினை தருவதில்லை. எஸ். தமன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் என அவர்களுக்கு மட்டுமே வாய்பளிக்காமல் எனக்கும் வாய்ப்பளித்தால் என்னாலும் மக்களுக்கு சில நல்ல பாடல்களை கொடுக்க முடியும்.


 



சில பாடல்களின் டியூன்களை காப்பி அடிப்பதற்கு முக்கியமான காரணமே படக்குழுவின் கட்டாயம் தான். யாருக்கு தான் மற்றவர்களின் டியூன்களை காப்பியடிக்க பிடிக்கும். திரையுலகம் வெற்றியை மட்டுமே நம்புகிறது. ஒரு படம் சரியாக ஓடாவிட்டால் அதற்காக இசையமைப்பாளர் மீது குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?” எனப் பேசியுள்ளார்.


மணிசர்மாவின் இந்த வேதனையாக நேர்காணலை கண்ட அவரின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.  ஒரு காலத்தில் மெலடியின் பிரம்மா என அழைக்கப்பட்ட மணிசர்மாவின் கீழ் பணியாற்றியவர்கள் தான் தமன், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.