இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் லீக் தொடர் என்றால் அது ப்ரோ கபடி லீக்தான். 10வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் இந்த லீக்கில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இதில் அதிகபட்சமாக யு.பி யோதாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணி தலா 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதேபோல் டெல்லி தபாங், பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தலா 10 போட்டிகளுடனும் தமிழ் தலைவாஸ், புனேரி பல்தான், தெலுகு டைட்டன்ஸ் உள்ளிட்ட ஆறு அணிகள் தலா 9 போட்டிகளும் விளையாடியுள்ளது. குறைந்தபட்ச போட்டிகள் விளையாடியுள்ள அணி என்றால் அது யு மும்பா அணிதான். இந்த அணி இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. யு மும்பா அணி இன்று தனது 9வது லீக் போட்டியில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. 


இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி கடந்த சீசனில் அரையிறுதிவரை முன்னேறி அசத்தியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி மீது அதிகப்படியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் முதற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் தொடர் வெற்றிகளை அள்ளி எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்தது மட்டும் இல்லாமல், அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. 


இந்த சீசனில் இதுவரை தமிழ் தலைவாஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 7 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி எதிர்மறையாக 41 புள்ளிகள் பெற்றுள்ளதால், தமிழ் தலைவாஸ் அணி இனி தனக்கு உள்ள 13 போட்டிகளிலும் அதிகப்படியான புள்ளி பட்டியலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியை தவறவிட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது குறைந்துவிடும். 


இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் பலமான புனேரி பல்தான் அணியை நாளி அதாவது ஜனவரி 7ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது. புனேரி பல்தான் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியும் உள்ளது. புனேரி பல்தான் அணியைப் பொறுத்தவரையில் 41 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இது மட்டும் இல்லாமல் புனேரி பல்தான் அணி ரெய்டு பாய்ண்ட்கள் மட்டும் 135 பெற்றுள்ளது. 


புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அணியான புனேரி பல்தான் அணியும் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும் நாளை மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் உள் விளையாட்டு அரங்கில் இரவு 9 மணிக்கு மோதவுள்ளது.