பணியின்போது மதுஅருந்திவிட்டு புன்னம் சத்திரம் பகுதியில் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி, அரிவாளுடன் நடந்து சென்று ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்ட இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து கரூர் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.


 




கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புன்னம்சத்திரம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திவிட்டு, அப்பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் ஆண் ஒருவர் விழுந்து இறந்த கிடந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு சென்றுள்ளனர். 


 




அப்போது யுவராஜ் மற்றும் கோபிநாத் ஆகிய இரண்டு காவலர்களும், அதிக மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாச வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்ததால் ஆவேசம் அடைந்த கோபிநாத் என்ற காவலர் அரிவாளுடன் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.