தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர். ரஹ்மானின் சாயலிலேயே மெட்டமைக்க கூடிய ஹாரிஸ் ஜெயராஜ், முதன்முதலில் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானது 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் தான். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அதுவே அறிமுக படம். 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவரின் ஃபேவரட் மியூசிக் கம்போஸராக இருக்கும் இந்த இசைக் கலைஞன் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


ஹாரிஸ் ஜெயராஜ் தந்தையும் ஒரு இசைக் கலைஞராக இருந்ததால் அவருடைய மகனுக்கும் பிறப்பிலேயே இசை ஞானம் என்பது ரத்தத்தில் இருந்தது. தனது ஆறு வயது முதலே கர்நாடக சங்கீதம் பயின்ற ஹாரிஸ் ஜெயராஜ் தனது 13 வயதிலேயே லண்டனின் டிரினிட்டி இசைக்கல்லூரியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா என பலரிடமும் புரோகிராமராகப் பணியாற்றியுள்ளார். ஏராளமான விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.


 




ஆல் டைம் ஹிட்ஸ் :


'மின்னலே' படத்தின் தீம் மியூசிக் மூலமே ரசிகர்கள் அனைவரையும் கிளீன் போல்ட் செய்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதை தொடர்ந்து மஜ்னு, 12 பி, வாரணம் ஆயிரம், சாமி, கஜினி, காக்க காக்க, அயன் , ஏழாம் அறிவு, ஆதவன், கோ, ஒரு கல் ஒரு கண்ணாடி, என்னை அறிந்தால், என்றென்றும் புன்னகை என ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான ஹிட்ஸ்களை அள்ளி கொடுத்துள்ளார். அவரின் பாடல்கள் அனைத்துமே இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பெற்று இருக்கும். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 


வரவிருக்கும் படங்கள் :


அந்த வகையில் அவர் இசையமைத்துள்ள கௌதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்க உள்ளார் என பேச்சுக்கள் சினிமா வட்டாரத்துக்குள் அடிபடுகின்றன.  கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணிபுரிந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு தொழில் அதிபராகவும் வெற்றியாளராக ஜொலித்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். 


சொத்து மதிப்பு :


ஒரு படத்திற்கு இசையமைக்க குறைந்தது 3 கோடி வசூல் செய்யும்  ஹாரிஸ் ஜெயராஜூக்கு கார்கள் மீது மிகுந்த கிரேஸ் உள்ளது. ஹம்மர் தான் அவரின் மிக ஃபேவரைட் காராம். அது தவிர அவரிடம் வேறு பல விலையுயர்ந்த கார்களும் உள்ளன. சென்னை, வளசரவாக்கத்தில் சுமார் 35 கோடி மதிப்பிலான ஒரு பங்களா உள்ளதாம். அவர் வசிக்கும் வீட்டிலேயே அதிநவீன ஸ்டூடியோ ஒன்றையும் அமைத்துள்ளாராம். அதன் மதிப்பே 30 கோடிகளை தாண்டுமாம்.


அது தவிர சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மால் ஒன்றில் அவருக்கு சொந்தமாக மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பல வழிகளில் இருந்தும் வருமானம் குவிந்து வரும் நிலையில் இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் அவரின் சொத்து மதிப்பு எப்படியும் 175 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.