ஜி.வி பிரகாஷ - சைந்தவி தம்பதி


தமிழ் சினிமாவின் மிகவும் ரசிக்கப் படும் தம்பதிகள் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி. ஜி. வி பிரகாஷ் இசையில் சைந்தவி பாடும் பாடல்களுக்கு என ரசிகர்களிடம் ஒரு தனி மதிப்பு இருக்கிறது. பள்ளிக் காலத்தில் இருந்து காதலித்து வந்தவர்கள் இசையமைப்பாளர்  ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதியினர். கடந்த 2013ஆம் ஆண்டு இருவருக்கு தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்த யாரோ இவன், பிறை தேடும் இரவிலே , யார் இந்த சாலையோரம் , என்னாச்சு ஏதாச்சு , ஒரு மனசெல்லாம் மழையே போன்ற சிறந்த பாடல்களில் இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள்.


 கடந்த ஆண்டு இந்த தம்பதியினர் தங்களது பத்தாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடினார்கள். தங்களது திருமண நாளில் பாடகி சைந்தவி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான வரிகளை எழுதி பதிவிட்டிருந்தார். “ நமக்கு திருமணமாகி  10 ஆண்டுகள் கழிந்துவிட்டன ஆனால் திரும்பிப் பார்க்கையில் நேற்று போல் இருக்கிறது. என் வாழ்க்கைத் துணைக்கு 10-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். ஒரு நல்ல நண்பனாக , ஒரு பாசத்துக்குரிய கணவனாக, நமது மகளுக்கு ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்காக நன்றி. ஒரு சிறந்த நபராக இருப்பதற்கு நன்றி. 10 ஆண்டுகளை  நாம் சேர்ந்து கடந்ததைப்போல் காலமெல்லாம் பயணிக்க வேண்டும்.” என்று தனது கணவருக்கு மிக அழகான வரிகளை எழுதியிருந்தார் சைந்தவி.


சமீப காலங்களில் மாதத்திற்கு ஒரு பிரபல தம்பதிகள் தங்களது விவாகரத்தை அறிவித்து வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. கடைசியாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது திருமண உறவை முடித்துக் கொள்வதாக அறிவித்த தகவல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது ஜி.வி சைந்தவியின் விவாகரத்து தகவல் ரசிகர்களுக்கு அதே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது






இந்நிலையில், 10 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதியினர் விவாகரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில காலமாக தனித்து வாழ்ந்து வருவதாகவும், தற்போது தங்கள் திருமண உறவை முடித்துகொள்ள இந்தத் தம்பதியினர் முடிவு செய்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்ப்பூர்வ தகவலை விரைவில் ஜி.வி சைந்தவி இணைந்து வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.