எலக்சன் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் தமிழ், இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். 


இயக்குநர், நடிகர், வசனம் எழுதுபவர் என பன்முக தன்மை கொண்ட விஜயகுமார் உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது எலக்சன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தமிழ் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இயக்கியுள்ள இப்படம் மே 17 ஆம் தேதி வெளியாகிறது. நேற்று எலக்சன் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய எலக்சன் படத்தின் இயக்குநர் தமிழ், ஒருத்தரை அழிக்க வேண்டும் என்றால் போர் வாள் எல்லாம் தேவை இல்லை. 4 வார்த்தை புகழ்ந்து சொன்னால் போதும். புகழ், போதை, பெண், பெயர் என இதுக்காக சினிமாவுக்கு வரவில்லை. என்னை அழ வைத்தது, சிரிக்க வைத்தது. சிந்திக்க வைத்ததற்காக மட்டும் தான் வந்தேன். 


என்னுடைய ஒரு படத்தில் நடித்தவர்கள் அடுத்த படத்தில் இடம்பெற கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சேத்துமான் படம் முடிந்த ஒரு மாதம் கழித்து எலக்‌ஷன் படத்தின் கதையை எழுத ஆரம்பித்தேன். அப்போது கொரோனா எல்லாம் வந்து விட்டது. அந்த நேரத்தில் சூரரைப்போற்று படம் வெளியாகி இருந்தது. அந்த படத்துக்கு விஜயகுமார் தான் வசனம் எழுதியிருந்தார். நான் நீலம் புரொடக்‌ஷன்ஸ் கம்பெனியில் படம் பண்ணிட்டு இருந்ததால் பெரிய கம்பெனியில் படம் பண்ண வேண்டுமென நினைத்திருந்தேன். 


நம்மை விட அரசியல் அறிவு கொண்ட ஒருவர் வேண்டுமென்பதால் விஜயகுமாரை தேர்வு செய்தேன். கதை அனுப்பியதும் 2 நாட்கள் கழித்து போன் பண்ணி படம் பண்ணலாம் என சொன்னேன். கொரோனா காலக்கட்டங்களில் நிறைய பேசினோம். இந்த படம் உருவானதுக்கு ஒட்டுமொத்த காரணம் விஜயகுமார் தான்.  என்னுடைய சேத்துமான் கதையை தமிழ் சினிமாவில் யாரும் படம் பண்ண  மாட்டார்கள். மலையாள சினிமா என்றால் பண்ணுவார்கள். ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு படைப்பாளராக இருப்பதால் தான் அவர் அந்த படத்தை தயாரித்தார். இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழ் பேசினார். 


சேத்துமான் படம்


 கடந்த 2022ம் ஆண்டு சோனி லைவ் ஓடிடி தளத்தில் சோத்துமான் படம் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு பெருமாள் முருகன் கதை எழுதிய நிலையில் தமிழ் இயக்கியிருந்தார் விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.