Anirudh Hukum Concert : இசை நிகழ்ச்சியின்போது அனிருத் மீது பார்வையாளர்கள் பொருட்களை வீசி எறியப்பட்டதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்


அனிருத்


ஜெயிலர், லியோ, ஜவான் , தலைவர் 170, 171, இந்தியன் 2 , விடாமுயற்சி என அடுத்தடுத்து கோலிவுட்டின் டாப் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தொடர்ச்சியாக பாடங்களில் இசையமைத்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்குகிறார் அனிருத். தற்போதைய சூழலில் இந்திய சினிமாவில் பயங்கர பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். ஒரு பக்கம் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் மறுபக்கம் ரசிகர்களுடன் நேரடியாக இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கான்சர்ட் நடத்தி வருகிறார். 


ஹுக்கும் கான்சர்ட்..


அந்த வகையில்  தற்போது அவர் உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் கான்ஸர்ட் நடத்தி வருகிறார். ஹுக்கும் என்கிற அவரது இசைநிகழ்ச்சி லண்டன், துபாய், சிட்னி, உள்ளிட்ட நாடுகளில் தனது ஹிட் பாடல்களை பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தமிழ் மற்றும் வெளி நாட்டினர் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கிறார்கள். 


அனிருத் மீது பொருட்களை வீசி எறிந்த ரசிகர்கள்






பொதுவாக இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதுவே ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை தாண்டி அவர்கள் மீது அன்பைக் காட்டுவது, வித்தியாசமாக எதையாவது செய்து கவனமீர்ப்பதற்கு முயற்சி செய்வது என அமைந்து விடுகின்றன.


அந்த வகையில் அனிருத் இசை நிகழ்ச்சியிலும் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. மேடையில் அனிருத் மாஸ்டர் படத்தின் ”வாத்தி கம்மிங்” பாடலை பாடிக் கொண்டிருக்க, அவர் மீது ரசிகர்கள் வரிசையாக பொருட்களை வீசி எறிந்துள்ளார்கள். அவற்றில் சில பொருள்கள் அனிருத் மீது பட்டதில் அவருக்கு சின்ன காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், ரசிகர்களின் இந்த நடத்தைக்கு கோபத்தை வெளிக்காட்டாமல் சூழ்நிலையைப் பொறுமையாக கையாண்டுள்ளது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.


 






 


அனிருத் அமைதியாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் இந்த விஷயத்தில் தங்கள் கண்டனங்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள், அவரது முதிர்ச்சியான பொறுமைக்கு ஆதரவும், ரசிகர்களின் ஏடாகூடமான செயலுக்கு கண்டனங்களும் இணையத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.