டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளும் சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா சிபிஐ அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் அவரை ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கஸ்டடியில் வைத்திருந்தனர்.
தொடர் பரபரப்பை கிளப்பும் டெல்லி மதுபான வழக்கு:
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதா மீது, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்தும், வழக்கில் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல் செய்தார்.
இச்சூழலில், டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கவிதாவை தவிர ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
கே.சி.ஆர். மகளுக்கு தொடர் நெருக்கடி:
மற்றவர்களுக்கு பிணை கிடைக்காத நிலையில், சஞ்சய் சிங்குக்கு மட்டும் இந்த வழக்கில் பிணை கிடைத்துள்ளது. டெல்லியில் மதுபான உரிமம் பெறும் நோக்கில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சவுத் குரூப் குழுமத்தில் கவிதா முக்கிய பதவி வகித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சிறைக்குள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான புச்சி பாபுவின் தொலைபேசியில் சிக்கிய வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் நில பேரம் தொடர்பான ஆவணங்கள் குறித்து கவிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கவிதா அனுப்பியுள்ளார். அதில், "நான் பாதிக்கப்பட்டவள். எனது தனிப்பட்ட அரசியல் நற்பெயர் குறிவைக்கப்பட்டுள்ளது. எனது தனியுரிமையை நேரடியாக மீறி, எனது மொபைல் போனை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் காட்டப்படுகிறது.
நான் மத்திய விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைத்து அனைத்து வங்கி கணக்கு விவரங்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்ததாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து மொபைல் போன்களையும் ஒப்படைப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.