பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என மும்பை அந்தேரி பெருநகர நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கில் கங்கனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்த நிலையில் அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்திருந்தார். அதனால் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்த நீதிமன்றம் வருகின்ற விசாரணையில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளது.முன்னதாக, வழக்கை ரத்து செய்யக் கடந்த வாரம் கங்கனா கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஜூன் மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சியில் கடந்த நவம்பர் மாதம் பேசிய கங்கனா ‘பாலிவுட்டில் நெகட்டிவிட்டியை பரப்புவதற்கு என்றே ஒரு சிறுகூட்டம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு அதில் இயக்குநர் மகேஷ் பட், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பெருநகர மேஜிஸ்த்ரேட்டில் இதனை விசாரிக்கும்படி வழக்கு தொடுத்தார் ஜாவேத் அக்தர்.
தேவையில்லாமல் கங்கனா தனது பெயரை அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும் அதுவரை சுஷாந்த் பற்றி எதுவுமே தெரியாமல் திடீரென வந்து கங்கனா கருத்து கூறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்து இதனை விசாரிக்கச் சொல்லி அந்தேரி காவல்நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கிலிருந்துதான் தற்போது கங்கனா விலக்கு கேட்டு வருகிறார். அவர் தொடர்ச்சியாக ஆஜராகாததை அடுத்து எந்நேரமும் அவருக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கங்கனா நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையைத் தழுவி உருவான ’தலைவி’ திரைப்படம் அண்மையில் மூன்று மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் எம்.ஜி.ஆராக அர்விந்த் ஸ்வாமியும் நடித்திருந்தனர்.