தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சிவகார்த்திகேயன் தொடர் வெற்றி படங்களால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மிகவும் பிஸியான ஷெட்யூலில் பேக் டூ பேக் படங்களில் நடித்து வருகிறார்.


மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். சரிதா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படம் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


 



மாவீரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.கே. 21 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.கேக்கு ஜோடியாக முதல் முறையாக இணைகிறார் நடிகை சாய் பல்லவி.  


ராணுவ மேஜராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காஷ்மீர் பகுதியை சுற்றி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியது. இருப்பினும் ஜி20 மாநாடு காரணமாக பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடத்த தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் அதில் கலந்து கொள்ள தயாராகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹேர் லுக் ஸ்பெஷலாக இருக்க போகிறது.


எனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் வரையில் அதை சஸ்பென்சாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை மறைத்து வைத்துள்ளார். அது வரையில் அவரின் ஹேர் லுக்கை வெளிப்படுத்தமாட்டார். எஸ்.கே 21 திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து 2024ம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


 



அடுத்ததாக சிவகார்த்திகேயன் 'எஸ்.கே 22' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என்றும் இணையத்தில் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் படத்தின் நாயகி 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் என கூறப்படுகிறது. வெளியான இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் உண்மை தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.