Movie Ticket Price: திரையரங்குகளில் கட்டணம் உயர்த்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சினிமா டிக்கெட் ரூ.30 வரை விலை உயரும் என கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2020ம் ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன. அப்போது அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் போது மக்கள் நலன் கருதி சினிமா டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால், ரூ.120 இருந்த சினிமா டிக்கெட் ரூ.100 ஆகவும், ரூ.100 இருந்த டிக்கெட் ரூ.75 ஆகவும் குறைக்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக சினிமா டிக்கெட்டுகள் குறைவாக இருந்ததால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்ததுடன், அண்மையில் அரசுக்கு மனு அளித்தனர். அதை ஏற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் திரையரங்குகளின் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளார்.
இதனால் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. முதலாம் வகுப்பு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 130 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் தியேட்டர்களின் பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ரூபாயில் இருந்து 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே 160 ரூபாயாக இருந்த பாக்ஸ் டிக்கெட் கட்டணம் 180 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், எஸ்.பி. கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு, சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Salaar Trailer: கேஜிஎஃப் ரசிகர்கள் அடுத்த சம்பவத்து தயாராகுங்க.. பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்!