பொதுவாக, அந்தக் காலத்தில் இருந்தே, தெலுங்கு படங்கள் என்றாலே சற்று காரம், உப்பு, புளிப்பு, கிளுகிளுப்பு என எல்லாம் சற்றுத் தூக்கலாக, லாஜிக்கை மீறி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், தற்போது ஓடிடி-யில் வெளி வந்திருக்கும் ஸ்கந்தா படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அய்யா சாமி, “இரண்டே முக்கா” மணி நேரம், முடியல… அப்படியொரு படம்!
நானும், சென்சார் போர்ட் என வழக்கத்தில் அழைக்கப்படும் திரைப்படத் தணிக்கை துறையில் நீண்ட காலம் இருந்தவன் என்ற முறையில், உடனே கணக்கு சொல்ல முடியா அளவுக்கு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். சான்றிதழ்களில் கையெழுத்தும் இட்டிருக்கிறேன்.. ஆனா சாமி, இப்படியொரு படத்த இதுவரை பார்த்ததில்லை எனும் அளவுக்கு ஸ்கந்தா இருந்தது என்பதில் மிகையில்லை. இப்படியொரு கதையை, இதுவரை இந்திய திரையுலகம், ஏன், சர்வதேச திரையுலகம் கூட பார்த்திருக்காது… அப்படியென்ன கதைன்னு தற்போது பார்ப்போம்…
ஆந்திர முதலமைச்சர் பெண்ணுக்குத் திருமணம். இந்த விழாவுக்கு, தெலங்கானா முதலமைச்சர் பையன் வராரு.. வந்த இடத்தில் அந்தப் பெண்ணோடு ஓடிப்போயிடுராரு. கடுப்பாகும் ஆந்திர முதலமைச்சர் அடியாட்களை அனுப்ப, அப்ப வராரு படத்தோட ஹீரோ. வந்தவரும் சும்மா இல்லாம, ஆந்திரா சிஎம் பெண் மட்டுமல்ல, தெலங்கானா சிஎம் பெண்ணையும் தூக்கிட்டு, தம் சொந்த கிராமத்துக்குப் போயிடுராரு. ஹீரோவும், அவரது அப்பாவும் அங்கிருந்த சவால் மேல் சவால், ரெண்டு சிஎம்-களுக்கும் விடுவாங்க…
ரெண்டு சிஎம்-களின் பெண்கள் என்பதால், ஒட்டுமொத்த போலீஸ், ரவுடிகள் படை, வட்டம், மாவட்டம் என எல்லாம் ரவுண்ட் கட்டி தேடிப் போருங்க. அங்கப் போனா ரெண்டு சிஎம்-களாலும் ஏமாற்றப்பட்டு, தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் முதலாளியோட கதை வருது. அவருடைய நண்பரின் பையன்தான நம்ம ஹீரோ… இதெல்லாம் தெரிஞ்சவுடனே, ஒட்டுமொத்த படையும் ஹீரோவை தாக்குது.
எப்படியெல்லாம் அடிக்க முடியுமோ அப்படியெல்லாம் ஹீரோ திருப்பி அடிக்கிறாரு. ஆனா, வில்லன்களின் பலத்தால் ஹீரோ தோற்கப் போறார்ன்ற கட்டம் வரும் போது, ஹீரோ மாதிரியே இருக்கும் ஸ்பெஷல் ஹீரோ (இரட்டை வேடம்) என்ட்ரி ஆராரு… எல்லோரையும் சிக்சர் அடிச்சி துவம்சம் செஞ்சிட்டு, ரெண்டி சிஎம்-களையும் மீடியா முன்னால், செஞ்ச தப்புகளை எல்லாம் சொல்ல வைக்கிறாரு.
இந்த ஸ்பெஷல் ஹீரோ யாருன்னா, மொரோக்கா நாட்டில் படுபயங்கரமான வில்லன போட்டுத் தள்ளிட்டு, இந்த ஊருக்கு வராரு என இடைச்செருகல் கதை வருவது மட்டுமில்லாமல், ஸ்கந்தா பார்ட் 2-வில் இவர்தான் கலக்கப்போராரு என்று டைரக்டர் ஹின்ட் கொடுத்து படத்தை முடிக்கிறார்.
பாலய்யாவை வைத்து, லெஜெண்ட், அகண்டா என இரு ஹிட் படங்களைக் கொடுத்தவர்தான் பொய்யபட்டி சீனு. இவர்தான் ஸ்கந்தாவின் டைரக்டர். லெஜண்ட், அகண்டா இரண்டுமே லாஜிக்கை மீறி இருந்தாலும், திரைக்கதையும் சண்டை காட்சிகளும் பாலய்யாவின் டயலாக் டெலிவிரி போன்றவை படத்தை தூக்கிப் பிடித்து சூப்பர் ஹிட்டாக்கின.
ஆனால், இந்தப் படத்தில் இவை எல்லாமே மிஸ்ஸிங். படத்தின் ஹீரோவாக வரும் ராம் பொத்னேனி. சாக்லேட் பாய் ஆக்சன் ஹீரோவா எல்லோருக்கும் தெரியும். இந்தப் படத்துல, தமக்கு கொடுத்த பணியை சிறப்பா செஞ்சிருக்காரு.. ஆனா, திரைக்கதைய அவருக்கு ஒத்துழைக்கல. அதேபோல சண்டைக்காட்சியில புதுசா எதுவும் இல்ல. ஹீரோயினா வரும் ஸ்ரீலீலாவும் அழகா, படத்துக்குத் தேவையானத கொடுத்திருக்காங்க…
மற்றபடி, நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க… ஆனா, அகண்டாவுல இருந்த ஆக்ரோஷம், லெஜண்ட்ல இருந்த ஆக்சன் எல்லாமே இந்தப்படத்துல மிஸ்ஸிங்.. தமன் தான் இந்தப் படத்துக்கு இசை… பெரிசா எடுபடல. ஆனா, படத்தோட சினிமோட்டோகிராபி எனும் ஒளிப்பதிவு அசத்தலா இருக்கு. சுமார் 90 கோடி பட்ஜெட்ல படத்த எடுத்திருக்காங்க..இதுவரைக்கும் கலெக்ஷன் 50 கோடியை தாண்டலையாம்.
ஓடிடி-யில ரிலீசாயிருக்கு. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமாகிறது. முதல் பாகத்தோடு முடிவுல, இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுக்கிறாங்க.. ஆனா, வருமா என்பது டவுட்டுதான்.. ஆனா, பொறுமை இருந்தால் படத்த நிச்சயம் பாருங்க…. அப்படியே “ஷாக்” ஆயிடுவிங்க!