Killers Of The Flower Moon Review Tamil: இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன். லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo Di Caprio) ராபர்ட் டி நிரோ (Robert de niro) , லில்லி கிளாட்ஸ்டோன் (Lily Gladstone) , ஜெஸ்ஸி ப்ளேமன்ஸ் (Jesse Plemons) உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாராமெளண்ட் பிக்ச்சரஸ் மற்றும் ஆப்பிள் டிவி இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வழங்கியுள்ளது. கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இப்படத்துக்கு R சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் ( Killers Of The Flower Moon)



ஆங்கிலேயர்களால் செவ்விந்தியர்கள் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க பழங்குடி மக்களில் ஒரு இனம் ஓசேஜ் இனம். அமெரிக்க நிலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து குடிபெயர்ந்து கடைசியாக ஒக்லஹாமாவில் வந்து சேர்கிறார்கள். "நாங்கள் சிறந்த வாழ்க்கையை வேண்டவில்லை, நாங்கள் உயிர்வாழ மட்டுமே ஒரு இடத்தை விரும்பினோம்" என்று ஒரு காட்சியில் ஓசேஜ் பழங்குடியினர் ஒருவர் கூறுகிறார். ஆனால் இந்த ஓசேஜ் மக்கள் குடிபெயர்ந்த அதே இடத்தில் தான் ‘கருப்புத் தங்கம்’ என்று சொல்லப்படும் கச்சா எண்ணெய் வளம் நிறைந்திருக்கிறது.


இதனால் ஈர்க்கப்படும் அமெரிக்கர்கள் இந்த மக்களிடம் இருந்து இந்த நிலங்களை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால் ஓசேஜ் மக்களுக்கு தங்கள் நிலத்தில் இருக்கும் வளத்தின் மதிப்பு தெரிந்திருந்ததால் அவர்கள் தங்களுடைய நிலத்துக்கு விலை வைக்கிறார்கள். தங்கள் நிலத்தில் இருக்கும் வளங்களுக்கு தாங்களே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதனால் பொருளாதாரத்தின் அவர்கள் அமெரிக்கர்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.


புதிய கடவுள்




படத்தின் முதல் காட்சியில் ஓசேஜ் மக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்து தங்களது இனத்தின் சின்னம் ஒன்றை கைவிடுகிறார்கள். இனிமேல் தாங்கள் ஆங்கிலேயர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க இருப்பதாகக் கூறி தங்களது பழமையான இனத்தின் சின்னம் ஒன்றை மண்ணில் புதைக்கிறார்கள்.அடுத்த காட்சியில் அதே நிலத்தில் இருந்து கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிக்கிறது. அதில் நனைத்து கொண்டாடுகிறார்கள் அந்த மக்கள். அவர்களின் பழைய கடவுள் புதைக்கப்பட்டு புதிய கருப்பு நிற கடவுளை கொண்டாடுகிறார்கள் 


இத்தனை வளங்கள் இருந்தும் அதன் பயன்களை நேரடியாக அனுபவிக்க முடியாமல் பழங்குடி இனத்திடம் கையேந்தி நிற்கும் குடைச்சல் அமெரிக்கர்களிடம் இருந்து வருகிறது. இதனை ஈடு செய்ய தங்களால் முடிந்த வகைகளில் அவர்களின் பணத்தை தங்களது பிடிக்குள் வைக்கும் அமைப்புகளை உருவாக்குகிறார்கள் ஆங்கிலேயர்கள். வங்கிகளை அறிமுகப்படுத்துகிறார்கள். கல்வி, தேவாலயம் என சந்தை போன்ற அமைப்புகளை உருவாக்கி அவர்களுடைய பணம் மீண்டும் அவர்களுக்கே வரும்படி செய்கிறார்கள்.


இப்படியான நிலையில் தான் போர் முடிந்து தனது நாட்டுக்குத் திரும்புகிறார் கதாநாயகன் எர்னெஸ்ட் பர்க்ஹார்ட் (Leonardo dicaprio). பெற்றோர் யாரும் இல்லாத எர்னெஸ்ட், இவனது மாமா வில்லியம் ஹேல் ( Robert de niro). ஓசேஜ் மக்களால் அதிகம் மதிக்கப்படும் ஒருவராக இருக்கும் வில்லியம் ஹேல் பொதுவாக கிங் என்று அழைக்கப்படுகிறார். அவர்களிடம் பழங்குடி மொழியில் பேசுகிறார். அவர்களின் சடங்குகளில் கலந்துகொள்கிறார்.  மாலீ என்கிற ஓசேஜ் பெண்ணிடம் காதல் கொள்கிறான் எர்னெஸ்ட். அவளைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஆலோசிக்கிறார் வில்லியம். இதெல்லாம் ஒரு புறமிருக்க மற்றொரு பக்கம் ஓசேஜ் மக்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவர் உயிரிழந்து வருகிறார்கள்.


அதிகப்படியான சொத்துக்களை வைத்திருக்கும் ஓசேஜ் மக்களின் செல்வத்தை தன்வசப்படுத்த ஓசேஜ் இனப் பெண்களை அமெரிக்கர்கள் திருமணம் செய்துகொண்டு பின் அந்த பெண்களின் சொத்துக்களை தன்வசப்படுத்த அவர்களை கொலை செய்வதை தனது நோக்கமாக வைத்திருக்கிறார் வில்லியம் ஹேல். அவர் சொல்வதை எந்த வித சுயசிந்தனையும் இல்லாமல் கண்மூடித்தனமாக அப்படியே செய்பவராக எர்னெஸ்ட் இருக்கிறான். இந்தக் கொலைகள் எப்படி வெளிச்சத்திற்கு வருகின்றன என்பதே படத்தின் கதை.


விமர்சனம்


உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து டேவிட் கிரான் எழுதிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஒரு தனித்துவம், கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை தனிப்பட்ட காட்சிகளாக இல்லாமல் அவர்களின் செயல்களால் மட்டுமே வெளிப்படுத்தி இருப்பதே!


கதாநாயகன் எர்னெஸ்ட் உண்மையாகவே கொடூரமான பணத்தாசை பிடித்தவனா, அவனுக்குள் ஒரு நல்லவன் இருக்கிறானா, தனது மனைவியை அவ்வளவு நேசிக்கும் அவன், பணத்திற்காக அவளை கொலை செய்ய ஏன் துணிகிறான் என்கிற எந்த கேள்விக்கும் தெளிவான பதில் கிடைப்பதில்லை. அவனது உள்ளுணர்வு எந்த இடத்திலும் வெளிப்படுவதில்லை. அவனது செயல்களே நாம் அவனை புரிந்துக்கொள்வதற்கான ஒரே கருவி. அதே போல்தான் ராபர் டி நிரோ நடித்திருக்கும் வில்லியம் கதாபாத்திரமும்.




சினிமாவில் தொழில்நுட்பப் பயன்பாடுகள் எவ்வளவோ முன்னேறி இருக்கின்றன. திரைக்கதையை சுவாரஸ்யமாக வைத்துக் கொள்ள எத்தனையோ உத்திகளை இயக்குநர்கள் கையாள்கிறார்கள். ஆனால் தன்னுடை 80 வயதின் நிதானத்துடன் ஒரு கதையை நேர்கோட்டில் சொல்லிச் செல்கிறார் மார்ட்டின் ஸ்கார்செஸி. விறுவிறுப்பான காட்சிகளை நம்பாமல் கதையின் தீவிரத்தை படிப்படியாக கட்டமைப்பதன் மூலம் உணர்ச்சிகளை ஊசியேற்றும் கூர்மையில் கடத்துகிறார்.




டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ, லிலி க்ளாட்ஸ்டோன் ஆகிய மூவரும் தங்களது நடிப்பால் ஒவ்வொரு காட்சியின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்துகிறார்கள். குறிப்பாக எர்னெஸ்டாக லியோனார்டோ டிகாப்ரியோ தன்னுடைய கதாபாத்திரத்தின் இயல்பை அப்படியே பிரதிபலிக்கிறார். மூன்றரை மணி நேர படத்தில் படம் முழுவதும் பின்னணி இசை ஓடிக்கொண்டே இருக்கிறது.


கதாபாத்திரங்களின் மனதை புரிந்துகொள்ள நமக்கு கூடுதல் பலமாக இருப்பது பின்னணி இசை. ஒரு இனம் துரோகத்தால் அழிக்கப்பட்ட கதையை பேசுகிறது 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' திரைப்படம்.