வாராவாரம் வெளியாகும் திரைப்படங்களுக்குச் சென்று திரை விமர்சனம் எழுதுவதை வேலையாக செய்து வந்த எனக்கு, அலுவலக நண்பர்கள் வித்தியாசமான யோசனையைக் கொடுத்தனர். சமீபத்தில் ரீ மாஸ்டர் வெர்ஷனில் வெளியான சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ படத்தை பார்த்து விட்டு 2கே கிட்டான எனக்கு ஏற்படும் அனுபவத்தை, ஸ்பெஷல் கட்டுரையாக எழுத சொன்னார்கள். அதன்படி ஞாயிற்று கிழமை முன்பகல் 11:45 மணி காட்சியை காண சென்னையின் பிரபல மால் ஒன்றிக்கு சென்று இருந்தேன்.


படம் பார்க்க கிளம்பும் போது மாநகரத்தில் சாரல் மழை அடித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டி திரையரங்கிற்குள் நுழைந்தேன். என்னைச் சுற்றி இருந்த என் வயதினர் எல்லாம் லேட்டஸ்டாக ரிலீஸான படங்களுக்கு செல்ல, நான் மட்டும் பழைய படத்தை பார்க்கப் போகிறேனே என்ற ஒரு விதமான தயக்கம் எனக்குள் இருந்தது. நான் படம் பார்த்த அந்த ஸ்கீரினில் அனைவருமே முதியவர்களாக இருந்தார்கள். அழகான வயதான ஜோடிகளையும், சில குடும்ப ஆடியன்ஸையும் கண்டேன். 



வசந்த மாளிகை கதைக்கரு




கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த ‘வசந்த மாளிகை’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் விவரமான தனிப்பட்ட விமர்சனத்தை இங்கு காணலாம்.


படம் தொடங்கியுடன் ஒரு பெரிய விமானம் வானத்தில் பறக்க, அதில் மது அருந்திவிட்டு தள்ளாடி கொண்டிருந்தார் ஆனந்த் (சிவாஜி கணேசன்). அதைத் தொடர்ந்து வந்த காட்சிகளிலும் மது, மாது என தன் வாழ்க்கையை மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த ஜமீன் பரம்பரையை சேர்ந்த கோமானுக்கு, லதா(வாணி ஸ்ரீ) அறிமுகமாகி அவரின் தனிப்பட்ட செகரட்டரி ஆக பணிபுரிகிறார்.


ஆனந்த் செய்வது எதுவும் லதாவுக்கு பிடிக்கவில்லை. எப்பாடு பட்டாவது அவரை சரி செய்ய வேண்டும் என மெனக்கெடுகிறார் லதா. பின், இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்த கதாநாயகி, செல்வ சீமான் சிவாஜிக்கும் இடையிலான உறவு எப்படி மலர்ந்து சுருங்குகிறது? இந்த பந்தம் திருமணத்தில் முடிகிறதா? இதனிடையில் அவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் ஆகிறது என்பதே மீதி கதை.


இப்படம் எனக்கு எப்படி இருந்தது?


இதற்கு முன்னால் டிவியிலோ அல்லது ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட சமயத்தில் கூட நான் வசந்த மாளிகை படத்தை பார்க்கவில்லையென்றாலும் சிவாஜியின் மற்ற படங்களைப் பார்த்துள்ளேன். அதில் சிவாஜியின் நடிப்பு அக்காலத்திற்கு ஏற்றதாகவும், நாடகங்களை பார்த்து வளர்ந்து திரையில் படத்தைப் பார்த்த அந்த காலத்து ஆடியன்ஸிற்கு பிடித்ததாகவும் இருந்தது.  ஆனால் இக்கால சினிமாவில் வரும் பிரபலங்களின் நடிப்பை பார்த்துவரும் எனக்கு,  சிவாஜி தனது மற்ற படங்களை விட இந்த படத்தில் சற்று மிகையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாரோ என்று தோன்றியது.  


வாணி ஸ்ரீ பற்றி சொல்ல வேண்டும் என்றால், கதாநாயகனுடனே கதையில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிக்கிறார். இது சிவாஜியின் படம் மட்டும்தான் என்று சொல்லமுடியாத அளவுக்கு வாணி ஸ்ரீக்கு சம அளவிலான கதையில் முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டுள்ளது. 


சிவாஜிக்கு அண்ணனாக நடித்த கே.பாலாஜியும், அவருக்கு மனைவியாக நடித்த சுகுமாரியும் குடும்பங்களில் நிலவும் எதார்த்தமான அங்காளி பங்காளி பந்தத்தை மிகையில்லாமல் வெளிப்படுத்தி உள்ளனர். 




அடுத்தாக நாகேஷ், இவர் தன் முதலாளிகளிடம் சாமர்த்தியமாக பேசி பணம் சம்பாதித்து வரும் சாமானியனாக நடித்துள்ளார். உருவ கேலி செய்யாமல் கதைக்கேற்ற வசனங்களின் மூலம் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார். அவருடன் சமையல்காரராக வரும் வி.கே ராமசாமி, நாகேஷின் மனைவியாக வரும் ரமா பிரபா ஆகியோருக்கு சிறு ரோல் கொடுத்து இருந்தாலும் அசத்திவிட்டார்கள்.


வாணி ஸ்ரீயின் அப்பாவாக மேஜர் சுந்தராஜன்,அண்ணனாக வரும் ஸ்ரீகாந்த், அம்மாவாக வரும் பண்டாரி பாய், சிவாஜியின் விசுவாசியாக வி.எஸ்.ராகவன், குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி என அனைவரின் நடிப்பும் மெர்சல்தான்!


பாடல்கள் 


‘ஓ மானிட ஜாதியே’, ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே’, ‘கலைமகள் கைப்பொருளே’, ‘அடியம்மா’,  ‘ராஜாத்தி’, ‘மயக்கமென்ன’, ‘இரண்டு மனம்’, ‘யாருக்காக’ என 8 பாடல்களைக் கொண்டுள்ளது இப்படத்தின் ஆல்பம். 


ஒரு சில பாடல்கள் தேவையில்லாமல் இருக்கிறதோ என்று தோன்றினாலும், ‘கலைமகள் கைப்பொருளே’ பாடல் படக்கதையில் வரும் சிவாஜியின் நிலைமையை உவமைப்படுத்தி எழுதப்பட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. எனக்கு அது வித்தியாசமாகவே இருந்தது.


மேலும் “ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்” பாடல் வரிகளை இதில்தான் முழுமையாக கேட்கிறேன். இப்பாடலை கேட்கும் போது என்னை போன்ற 2கே கிட்ஸ்களுக்கு ‘பிதாமகன்’ படத்தில் வரும் இந்த பாடலின் வரிகளுக்கு சூர்யா, சிம்ரன் ஆடுவது தான்  நினைவுக்கு வந்தது. க்ளைமாக்ஸில் வரும் யாருக்காக பாடல் அந்த காலத்தில் காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு ஏற்ற சூப் சாங்காக அமைந்திருக்கும் என தோன்றியது.



எனக்கு ஷாக் கொடுத்தவை 




இப்போதுதான் அனைவரும் குடியும் கூத்துமாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நான், அந்த காலத்திலேயும் அப்படிதான் இருந்தது என என் குடும்பத்தினர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. செவிவழியாக கேட்டு தெரிந்துகொண்ட எனக்கு வசந்த மாளிகை படமே இந்த நிதர்சனத்தை காட்சிப்படுத்தியுள்ளது.


சிவாஸ் ரீகல், வாட் 69, ப்ளாக் டாக் என கலர் கலராக கிடைக்கும் வெளிநாட்டு மதுக்களை இப்படத்தின் முதல் பாதியில் காணமுடிகிறது. அது போல், அந்தக் காலத்து எலைட் பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்து நபர்கள் இதற்கு எப்படி மறுப்பு தெரிவிக்காமல் இருந்தனர் என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது! ஏனென்றால் பொதுவாக  பெண்கள் மது அருந்தினால் அவர்களின் கேரக்டரை சீர்குலைக்கும் சமூகம் நம்மைச் சுற்றி உள்ளது. 


ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் இப்படத்தில், “மது, புகை கேடு விளைவிக்கும்” என்ற எச்சரிக்கை விளம்பரமும் கொடுக்கப்படவில்லை! அப்படியென்றால் இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.


சதா நேரமும் குடித்து கொண்டிருக்கும் சிவாஜி மற்றவர்களுக்கு சிவாஜியாக தெரிந்த போது, எனக்கு மட்டும் மாஸ்டர் படத்தில் ஜே.டி. (ஜான் துரைராஜ்) ஆக  வரும் விஜய் தான் நினைவுக்கு வந்தார்.



சிரிக்க வைத்தது 




இப்படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என்னை சிரிக்க வைத்தது. ரத்தம் சிந்தும் போது எனக்கு அவை அரை லிட்டர் சிவப்பு பெயிண்ட் போல் தோன்றியது. அத்துடன் லதா “இதை குடியுங்கள் நல்லா குடியுங்கள்.. விஸ்கியை விட இது சிவப்பாக இருக்கும்.. அது தரும் போதயை விட இது அதிக போதை தரும்” என்று சொல்லும் போது எனக்கு குபீர் சிரிப்பு வந்தது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன் இது ஃபேஸ்புக்கில் வலம் வந்து கொண்டிருந்த வைரலான மீம் டெம்ப்ளேட்!


அதுபோல் இதில் வரும் நடிகைகளின் ரேடியோ கொண்டையை சுற்றி வர ஒரு நாள் ஆகிவிடும் போல! பணக்கார பெண்களின் கொண்டை பெரியதாகவும், ஏழை பெண்களின் கொண்டை சிறியதாகவும் உள்ளதை பார்த்தால் இதிலே ஒரு பெரும் உவமேயம் அடங்கி இருப்பது தெரிகிறது.


ஏற்றுக்கொள்ள முடியாதது 


ஊதாரியாக இருக்கும் ஆண்மகனை திருத்துவது ஒரு பெண்ணின் வேலை அல்ல, அது போல், ஒரு பெண்ணுக்கு பண வசதி செய்து கொடுப்பது ஒரு ஆணின் வேலை அல்ல. இவை இரண்டையும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக உறுதுணையாக செய்து கொள்ளலாம். ஆனால், ஆண் மகன் என்றால் அவனின் வேலை இதுதான். பெண் என்றால் அவளின் வேலை இதுதான் என முன்வைக்கும் ஜெண்டர் ரோல் கருத்து முற்றிலும் தவறான விஷயம்.


புதியதொரு அனுபவம் 


எப்போதும் படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகும் எனக்கு, இது திரைப்படத்தை தாண்டிய ஒரு அனுபவத்தை கொடுத்தது. என் அருகில் அமர்ந்த வயதான ஜோடிகளின் சிரிப்பு சத்தமும், “சிவாஜி இருமுவதில் கில்லாடி” போன்ற கவுண்டர்களும் க்யூட்டாக இருந்தது. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்...!