ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சத்திய சோதனை. ஒரு கொலையை மையப்படுத்திய ஒன் லைன். அதை நியாயப்படுத்தும்  கதைக்களம் என படம் தொடங்கியது முதல் இறுதி வரை படக்குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 

ஒருவன் நேர்மையாக நடந்துகொள்வதால் எதிர்கொள்ளும் சோதனைகளை விளக்குகிறது சத்திய சோதனை.  தமிழ் சினிமாக்களில் காவல்துறை காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வசனம்,  ‘தண்ணி இல்லாத காட்டிற்கு மாத்திடுவேன்” என மேல் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் கூறுவார்களே, அப்படியான தண்ணி இல்லாத காட்டில் உள்ள காவல் நிலையம்.  அதன் கட்டுப்பாட்டில் நடக்கும் கொலை. அந்த கொலையை விசாரிக்கும் காவலர்கள் மற்றும் நீதிமன்றம் என கதை தொடர்ந்து ஒரே கதாபாத்திரங்களுக்குள் நடைபெற்றாலும் நகைச்சுவையான வசனங்கள் சலிப்பை ஏற்படுத்தவில்லை.  தேவையில்லாத சண்டைக்காட்சிகள், பாடல்கள் என எதுவும் இல்லை என்றாலும் படத்தின் நீளம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம். ஒரு சில வார்த்தைகளை மியூட் செய்த சென்சாருக்கு ஆங்காங்கே இருந்த இரட்டை அர்த்த வசனங்களை எப்படி விட்டு வைத்தது  என்பது ஆச்சர்யம் தான்.

 

படத்தின் ப்ளஸ்

 

படத்தின் பலம் என்று சொன்னால் காவலர்களாக வரும் சித்தன் மோகனும் செல்வமுருகனும் தான். இதுவரை சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இருவருக்கும் இந்த படம் மிக முக்கியமான படமாக இருக்கும். நீதிபதியாக வரும் ஞானசம்பந்தம் வசன உச்சரிப்பிலேயே கீழமை நீதிமன்றங்களை கண்முன் கொண்டு வருகிறார். அதேபோல் பாட்டி கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.   ப்ரேம்ஜி கதாபாத்திரத்த்தைப் பொறுத்தவரையில் முதல் பாதியில் வழக்கமான ப்ரேம்ஜி தென்பட்டாலும் இரண்டாம் பாதியில் கதையோடு ஒன்றிய நடிப்பால் பாராட்டைப் பெறுகிறார்.  விருதுநகர் மாவட்டத்துக்கான வட்டார மொழி மற்றும் நகைச்சுவை நிறைந்த வசனம், படம் பார்ப்பவர்கள் மத்தியில் கைத்தட்டலைப் பெறுகிறது. இன்ஃபார்மர் கதாபாத்திரம் காவல் துறை மீதுள்ள மிரட்சியை உடைக்கிறது. குறிப்பாக சாட்சிகளை தயார் செய்யும்போது காவல் நிலையத்தில் காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையில் நடக்கும் உறவாடலை சிறப்பாக காட்சிபடுத்தி பாராட்டைப் பெறுகிறார்கள். 

 

படத்தின் மைனஸ்

 

படத்தின் மைனஸ் எனச் சொன்னால் இதுமாதிரியான படத்துக்கான பட்ஜெட் தான். இதனாலேயே  ஒரு வீட்டை காவல் நிலையமாக மாற்றி இருக்கிறார்கள்.  ப்ரேம்ஜி கதாப்பாத்திரம் பாராட்டைப் பெற்றாலும் கதையோடு ஒன்றிய நடிப்பை வெளிப்படுத்த முடியாததால் படத்திற்கு பின்னடைவாகவும் உள்ளார். ப்ரேம்ஜி கதாப்பாத்திரத்தை வேறு யாராவது நடித்திருந்தால் படம் இன்னும் கவனம் பெற்றிருக்கும். வணிக ரீதியாகவும் திருப்தியான படமாக உருமாறியிருக்கும். 

 

நம்பிக்கை 

 

தமிழ்நாட்டில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் மலையாளப் படங்கள் மீது தனி ஈர்ப்பும் வரவேற்பும் உள்ளதற்கு காரணம் அப்படங்களில் மாஸ் ஹீரோக்கள் நடிக்கவில்லை என்றாலும் ஒரு ஃபிரேம் கூட கதையை விட்டு நகர்வதில்லை என்பதும், ஒருபடம் முடியும் போது ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். அப்படியான படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படம் சிறந்த  படமாக இருக்கும். அதேபோல் பெரிய பட்ஜெட் படங்கள் கோட்டை விடும் போது இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்கள் நம்பிக்கை அளிக்கிறது. 

 

ஒட்டுமொத்ததில் படம் எப்படி இருக்கு?

 

நிதானமான திரைக்கதையாக இருந்தாலும்  நேர்த்தியான காட்சிகளால் பொதுவுடமை; தனியுடமையான பின்னர் சத்தியத்திற்கு எப்போதும் சோதனைதான் என விளக்குகிறது படம். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து விருது கொடுத்தால் அதில் இப்படம் எப்படியும் சில  விருதுகளை வாங்கலாம்.