இந்த ஆறு கதைகளில்  எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற ஒரு படம் என்றால் பறவைக் கூட்டில் வாழும் மான்களைச் சொல்லலாம். சிலருக்கு படம் மிக அழகான ஒரு அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அப்படி என்னதான் படத்தின் கதை?


தனது கணவர் திருமண வாழ்க்கையில் தன்னுடன் மகிழ்ச்சியாக இல்லாததை தெரிந்துகொள்ளும் மனைவி, அவருக்கு விவாகரத்து கொடுத்து அவர் மனதிற்கு பிடித்த இன்னொருவருடன் தனது கணவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுச்செல்ல முடிவு செய்கிறார். என்னடா படத்தின் கதையை மொத்தமாக சொல்லிவிட்டதாக உணர்கிறீர்களா? கதை என்று மறைத்து வைக்க இந்தப் படத்தில் எதுவும் இல்லை. நாம் இந்தப் படத்தில் குறிப்பாக பார்க்கவேண்டியது வசனங்களைத்தான். மனதின் ஒவ்வொரு உணர்வையும் எளிய வசனங்களின் வழியாக கடத்தியிருக்கிறார் பாரதிராஜா. கதாபாத்திரங்களின் மனதில் இருக்கும் குழப்பங்களை மிகக் கச்சிதமாக வார்த்தைகளில் வடித்திருக்கிறார் பாரதிராஜா.


உங்களுக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லையா? உங்களைப்போல் கதை பிடிக்காத இன்னொருவர் யார் தெரியுமா? இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் பாரதிராஜா. தனக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை என்றும் இருந்தாலும் தான் இந்தப் படத்தை எழுதி இயக்க சம்மதித்துள்ளார் அவர்.


ஒரு மனைவி தனது கணவரில் இப்படியான ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவது ஏன் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது? மனைவியின் இடத்தில் கணவர் தனது மனைவியை இப்படி செய்திருந்தால் ஏற்றுக்கொள்வது எளிதாக இருந்திருக்குமா? அதே நேரத்தில்  நாம் மறந்துவிடக் கூடாத இன்னொரு விஷயம் என்னவென்றால் ஒரு உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்டதுதான் பறவைக் கூட்டில் வாழும் மான்கள். இந்தக் கதை இவ்வளவு விமர்சனங்களை சந்திக்கிறது என்றால் அந்தப் பெண் எத்தனை கேள்விகளை சந்தித்திருப்பார்? அப்படித்தானே..


பறவைக் கூட்டில் வாழும் மான்கள் கதையில் இரண்டு விஷயங்கள் வெற்றியடைகின்றன. முதலாவதாக இந்தப் படத்தின் கதை. ஒரு படைப்பு எல்லா நேரங்களிலும் நம் மனதிற்கு உகந்த, நம் மனது ஏற்றுக்கொள்ளும் அல்லது சமூகத்தில் சரி என்று வரையறுக்கப்பட்ட கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும் என்கிற கட்டாயமில்லை. ஏனென்றால் நம் வாழ்க்கை அப்படியான செளகரியங்களை நமக்கு தருவதில்லை. அதே போல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களும் அப்படிதானே. இப்படியான ஒரு கதை பார்வையாளர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு, அது நமது உள்ளுணர்வை கேள்வி கேட்கிறது என்பதே அந்தக் கதையின் வெற்றி. 


இரண்டாவது வெற்றி பெற்றது யார் தெரியுமா? இயக்குநர் பாரதிராஜா தான். தனக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று சொன்னபோதே இந்த படத்தை விட்டு அவர் வெளியேறி இருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தனக்கு இந்த கதையின் மீதான மறுப்பை தன்னை போன்ற  ஒரு கதாபாத்திரத்தை படத்தில் வைத்து அதன் மூலம் இந்தக் கதாபாத்திரங்களை புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார் பாரதிராஜா.