'மூப்பில்லா தமிழே தாயே' என்ற புதிய ட்ராக்கின் டீசரை கடந்த புதன்கிழமையன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலின் வெற்றிக்குப் பிறகு ரகுமானின் மஜ்ஜா நிறுவனத்தின் கீழ் வெளியாகும் அடுத்த ம்யூசிக் ட்ராக் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அமித் கிருஷ்ணன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அந்த பாடலுக்கு பாடகி தீ மற்றும் பாடகர் அறிவு குரல்கொடுத்தனர். இணையத்தில் பல மில்லியன் வியூஸ்களை தொடர்ந்து அந்த பாடல் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 




இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ரகுமான் தனது மஜ்ஜா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த ட்ராக் பாடல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளார். 'மூப்பில்லா தமிழ் தாயே' என்ற அந்த ட்ராக் பாடல் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் பாடலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 14-ஆம்  தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அந்த பாடலின் டீஸர் வெளியான நிலையில், ரகுமானின் ரசிகர்கள் மட்டுமின்றி பலராலும் அந்த டீஸர் விரும்பப்பட்டுள்ளது. 




'புயல் தாண்டியே விடியல்.. புது வானில் விடியல்.. பூபாளமே வா, தமிழே வா. தரணியான தமிழே வா' என்ற வரிகளை ரகுமான் பாட  பின்னணியில் ஒலிக்கும் நாதஸ்வர இசை அவர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கடற்கரை படகில் ரகுமான் நின்றுகொண்டு பாடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல படங்களுக்கு இசையமைத்த ரகுமான், அண்மையில் 99 சாங்ஸ் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.