மலையாள திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது தமிழ் சினிமாவையும் எட்டியுள்ளது. பிரபல நடிகையும், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினி தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். 


பாலியல் துன்புறுத்தல் குறித்து பாடகி சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டிற்காக நான் முதலில் இருந்தே அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறேன். சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த அவரை வேலை செய்யக்கூடாது என தடைவிதித்து விட்டார்கள். இந்த விஷயத்தில் ராதாரவி செய்தது மிக பெரிய தவறு. மற்ற வேலைகளை போல இதுவும் ஒரு தொழில். அதை தடை செய்ய எந்த உரிமையும் இல்லை. 



 


அதே போல நடிகை ஸ்ரீ ரெட்டியும் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என தடை விதித்துவிட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் இது குறித்து நான் பேசி நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு கார்டு ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் அதையும் வழங்கவில்லை. அதனால் அவரால் சின்னத்திரையில் கூட நடிக்க முடியவில்லை. இது நியாயமே இல்லாத ஒன்று.


இப்படி தடை விதிப்பது ஆண் ஆதிக்கத்தை காட்டுகிறது. எங்களிடம் தான் எல்லா அதிகாரமும் உள்ளது. எங்களை மீறி ஒன்றும் உங்களால் செய்ய முடியாது என்ற ஆதிக்கம் தான் இங்கே வெளிப்படுகிறது. அப்படி அவர்களை எதிர்ப்பவர்கள் தொழில் அத்தோடு முடிந்துவிடும். அதனால் அவர்களால் திரைத்துறையில் தொடர இயலாது. 


சட்டப்படி புகார் அளிக்க யாரும் முன்வராததற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான். நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே இது போல பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து இருக்கிறேன். 10 வயது சிறுமிக்கே இந்த நிலைதான். நான் என்னுடைய அம்மாவிடம் சொன்னபோது அவர் சென்று கண்டித்ததால் என்னை அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள். கிட்டத்தட்ட 79% படப்பிடிப்பு முடிவடைந்தது இருந்தது.  அந்த வயதில் ஒரு குழந்தை அம்மாவிடம் தான் போய் சொல்லும். ஒரு தைரியமான அம்மாவாக இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள், இல்லை என்றால் வெளியில் சொல்ல வேண்டாம் என சொல்லி விடுவார்கள். 


தற்போது நடிகைகள் சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி உள்ளிட்ட நடிகைகள் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து அவர்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்து இருந்தார் நடிகை குட்டி பத்மினி.