தமிழில் ரஜினி - கமல் போல மலையாளத்தில் மம்முட்டி - மோகன்லால். பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரையுலகிலும் தன் கால்தடத்தை பதித்திருக்கிறார். கீர்த்தி சக்ரா, காலபானி போன்ற நிறைய தேசப்பற்று நிறைந்த மலையாள படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். இந்நிலையில் மோகன்லால் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படமாக (Profile picture) நம் தேசிய கொடியான மூவர்ண கொடியாக மாற்றியுள்ளார். மோகன்லாலின் இந்த செயலை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் கோரிக்கை :
வருகின்ற ஆகஸ்ட் 15 இந்திய நாடு இந்த வருடம் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த மாபெரும் நாளை ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றும் வண்ணம், பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2 முதல் 15 வரை இணையவாசிகள் அனைவரையும் நம் நாட்டின் மேல் உள்ள பற்றை தெரிவிக்கும் வண்ணம் தங்களது சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படங்களில் நம் தேசிய கொடியை வைக்குமாறு கேட்டுக் கொண்டார். வழக்கமாக, பிரதமர் மோடி தன் நாட்டு மக்களுடன் உரையாடும் மான் கி பாத் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
மோடியின் வழியில் மோகன்லால்!
அதன் எதிரொலியாக இன்று மலையாள நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படத்தை தேசியக் கொடியாக மாற்றியுள்ளார். இதற்கு காரணம் மோகன்லாலின் தேசப்பற்றா அல்லது மோடி மீது உள்ள பற்றா என்று நெட்டிசன்கள் கூவி வருகின்றனர். சிலர் இதை நேர்மறையாக பார்த்தாலும், ஒரு சிலர் அவரது இந்த செயலை விமர்சித்து வருகின்றனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களான மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படத்தை தேசியக் கொடியாக மாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் இந்த கோரிக்கையை சில மக்கள் நாட்டுப்பற்றினை எதிரொலிக்கும் செயலாக பார்த்தாலும், சிலர் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைப்பதால் ஒருவன் தேசப்பற்றுள்ள மனிதனாக நிரூபணம் ஆகிடுமா என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்