பீகாரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் படிப்பதை விடுத்து பள்ளிக்கூடத்தில் விறகு வெட்டுவது மண் தோண்டுவது போன்ற வேலைகளைச் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில், குழந்தைகள் மரம் வெட்டுவது, கற்களை உடைப்பது, நிலத்தைத் தோண்டுவது போன்றவற்றை அந்த வீடியோ காட்சிகளில் காணலாம். பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள அரசுப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மண் தோண்டுதல் செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற கூலிவேலைகளை பள்ளியில் படிக்கும் குழந்தைகள் செய்வதை அந்த வீடியோவில் காணமுடிகிறது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் ரிச்சி பாண்டே, இந்த விஷயம் தனக்குத் தெரியும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ஒப்புக்கொண்டார்.
“நாங்கள் வீடியோவைக் குறித்துக் கொண்டோம், வெள்ளிக்கிழமை அன்று மாவட்டத்தின் காகோ தொகுதிக்கு உட்பட்ட இஸ்லாம்பூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள பள்ளிக்குச் சென்றோம். அங்கு சூழல் இன்னும் கவனிக்க வேண்டியதாக உள்ளது” என்று மாஜிஸ்திரேட் கூறினார். மேலும், பள்ளியில் பராமரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும், வருகை மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
”கரும்பலகைகள் உடைக்கப்பட்டுள்ளன. தயாரிக்கப்படும் மதிய உணவுகளும் நன்றாக இல்லை, ”என்று மாஜிஸ்திரேட் பாண்டே கூறினார், மேலும் நடவடிக்கைக்கு வீடியோவை ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. “முதன்மையாக, பள்ளியின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.
மாணவர்களை பள்ளிக்கூடமே பணியாளாக்கியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.