இந்தப் படம் மோகன்லால் மற்றும் ஷோபனாவின் கூட்டணியில் உருவாகும் 56ஆவது படமாக இருக்கும்.
ஷோபனா
1980ஆம் ஆண்டு வெளியான மங்களநாயகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷோபனா. இவர் தளபதி, பொன்மனச்செல்வன், எனக்குள் ஒருவன், சிவா, போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஷோபனா. நடிப்பு தவிர்த்து ஷோபனா ஒரு தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும் கூட. இரண்டு தேசிய விருதுகள், கேரள மாநில அரசு விருது, பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, கேரள அரசில் கலா ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார் ஷோபனா.
மோகன்லால் - ஷோபனா
மலையாளத்தில் திரையில் ரசிகர்கள் அதிகம் பார்த்த ஜோடிகளில் ஒன்று மோகன்லால் மற்றும் ஷோபனா. இருவரும் இணைந்து 55 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். எந்தெந்த மாதரம் (1986) , அபயம் தேடி (1986) , வெள்ளனகளுடே நாடு (1988), உள்ளடக்கம் (1991), மாயா மாயூரம் (1993), மணிச்சித்திரதாழு (1993) , மின்னாரம் (1994), நாடோடிகட்டு (1987) என இந்த இருவர் கூட்டணியில் வெளியான படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றன.
கடைசியாக மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான ’வாரனெ ஆவஸ்யமுண்ட்’ படத்தில் நடித்திருந்தார் ஷோபனா தற்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார். மோகன்லாலின் 360ஆவது படத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகை ஷோபனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மோகன்லாலுடன் இப்படத்தில் இணைவது குறித்து தனது உற்சாகத்தை வீடியோவாக ஷோபனா பதிவிட்டுள்ளார்.
மோகன்லால் 360
2021ஆம் ஆண்டு வெளியான ’ஆபரேஷன் ஜாவா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தருண் மூர்த்தி. 2022ஆம் ஆண்டு வெளியான ‘செளதி வெள்ளக்கா’ படத்தின் மூலம் பரவலாக கவனமீர்த்தார். தற்போது மோகன்லாலின் 360ஆவது படத்தை இயக்க இருக்கிறார்.
இப்படத்தில் ஷோபானா மற்றும் மோகன்லால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படம் இருவரும் இணைந்து நடிக்கும் 56வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 15 ஆண்டுகள் கழித்து இருவரையும் திரையில் பார்ப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.