'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' 


மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் நடித்து வரும் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்'  திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. இந்தப் படத்தில் ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு நவராத்திரி திருவிழாவின்போது வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. முன்னதாக நடிகர் மோகன்லால் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டது எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.‌


காதல், பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு நேர் எதிர் உணர்ச்சிகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' திரைப்படம் உருவாகி வருவதாகத் தகவல். மேலும், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகவும், அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தியும் இப்படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது.


மலைக்கோட்டை வாலிபன்


தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒரே கட்டமாக ஷூட்ட்டிங் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. மற்றொருபுறம் மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநரான லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியாக உள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படமும் பான் இந்திய அளவில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்து வருகிறது.


மலையாளம் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில், மது பிரசாந்த் பிள்ளை இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சென்னை, ராஜஸ்தான், புதுச்சேரி என பல இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  


இப்படத்தின் ஷூட்டிங் சென்ற ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.