பகாசூரன் படத்தின் பாடல் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் , எதிர்பாராத நிகழ்வால் அப்படத்தின் இயக்குநர் இயக்குநர் மோகன் ஜி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனைத் தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 






சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மோகன் ஜியின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனிடையே பகாசூரன் படத்தில் இருந்து  முதல்பாடலாக  ‘சிவ சிவாயம்’ பாடல்  நாளை வெளியாக இருப்பதாக நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்திருந்தார். 






ஆனால் எதிர்பாராத திருப்பமாக அஜித் நடித்துள்ள 61 வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் பகாசூரன் படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினர். இதனால் ட்விட்டரில் அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் ஐடியை குறிப்பிட்டு AK61 படத்தின் அப்டேட் எப்போது வரும். அதற்கேற்றாற்போல் பகாசூரன் படத்தின் பாடல் வெளியாகும் நேரத்தை மாற்றிக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இதனால் திட்டமிட்டபடி பகாசூரன் பாடல் வெளியாகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டது. 


இதனையடுத்து அஜித் பட அப்டேட் 6 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியானதால், ‘சிவ சிவாயம்’ பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என புது அப்டேட் ஒன்றை தனது ரசிகர்களுக்கு மோகன் ஜி தெரிவித்துள்ளார்.