சமூக ஊடகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பிய படமான ‘திரௌபதி’ படத்தை தொடர்ந்து , மோகன் ஜி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சட் ரிஷியே ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம். பொதுவாகவே மோகன் ஜி இயக்கும் படத்தில் சாதிய சாயல் இருக்கும் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.
முன்னதாக வெளியான திரௌபதி படத்தில் நாடக காதல் என்பதை மையமாக வைத்து , குறிப்பிட்ட சமுதாய மக்களை தாழ்த்தி காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படமும் அப்படியான சாயலை ஏற்படுத்தும் என்றே பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது.அப்போது பேசிய படக்குழுவினர் , ருத்ர தாண்டவம் நிச்சயமாக ஒரு சாதிய படம் இல்லை என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளனர்.
திரௌபதி படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி குறிப்பிடுகையில் , திரௌபதி படத்தில் தனக்கு கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார்.முன்னதாக படம் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்த இயக்குநர் மோகன், படம் நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானது அல்ல. எனக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் இடையில் எந்த போரும் கிடையாது. நான் அவருக்கு எதிரானவன் அல்ல எங்களுக்கிடையில் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டிதான் ” என குறிப்பிட்டுள்ளார். ‘ருத்ர தாண்டவம் ‘ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்க தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை மோகனே தயாரித்து இயக்குகிறார். 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். திரௌபதி படத்தின் வெளியீட்டு உரிமையையும் இவர்தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில் தற்போது டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மோகன் ஜி. தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறது. இன்று மாலை 05:06 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும்.. காத்திருந்து விழிப்புணர்வு பெறுங்கள்" என குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவு அப்போது மிகவும் வைரலானது. பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்டுகளை பதிவிட்டனர்.
முன்னதாக மோகன் ஜி வண்ணாரப் பேட்டை, திரௌபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருந்தார். இதில் திரௌபதி படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்த்தனர், குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதரித்தனர். ஊடகங்களிலும் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது திரௌபதி. எது எப்படியோ இந்த படத்தை தயாரித்து கொடுத்த ஜி.எம். ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அதிர்ஷடம்தான். குறைந்த பட்ஜெட் முதலீட்டில் எடுக்கப்பட்ட திரௌபதி படம் நல்ல லாபம் பெற்றுத்தந்தது. அதேபோல நடிகர் ரிச்சர்ட்டின் நடிப்பையும் பலர் வெகுவாக பாராட்டியிருந்தனர்.மோகன் ஜி மற்றும் ரிச்சட் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் ‘ருத்ர தாண்டவம் என்பது குறிப்பிடத்தக்கது.