நானும், பா.ரஞ்சித் இருவரும் பரம்பரை எதிரி கிடையாது என திமுக ஆதரவாளர் ஒருவருக்கு இயக்குநர் மோகன் ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று பல கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கடந்த ஆண்டு தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதில் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சென்னை திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் பொற்கொடி போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு வடசென்னை மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு இருந்த நிலையில், அவை அனைத்து பொற்கொடிக்கு சாதகமாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வரவேற்ற பா.ரஞ்சித்
இதனிடையே பா.ரஞ்சித் வெளியிட்ட பதிவில், “ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கின் பாதை அமைந்திருக்கிறது. திரு.வி.க நகர் பொற்கொடி போட்டியிடுவது ஆம்ஸ்ட்ராங் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல் பங்கெடுப்பு, வெற்றி அமைந்திருக்கிறது” என தெரிவித்தார்.
இதேபோல் பொற்கொடி போட்டியிடுவது தொடர்பான போஸ்டர் ஒன்றை இயக்குநர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் திமுக ஆதரவாளர் என சொல்லப்படும் ஒரு இணையவாசி, “தலித்துக்களை ஒடுக்கக்கூடாது, அவங்களுக்கு அதிகாரம் கிடைக்கணும்னு பேசிட்டு, பாஜகவோட கூட்டணி கட்சிக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்கான் பா.ரஞ்சித்.இதுலே வேடிக்கை என்னனா பா.ரஞ்சித் - மோகன் ஜி ரெண்டு பேரும் ஒரே கூட்டணி ஆதரவாளர்கள்” என தெரிவித்திருந்தார்.
இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள மோகன் ஜி, “காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும்.. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு” என பதிலளித்துள்ளார். இயக்குநர் மோகன் ஜி இந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
