இயக்குநர் அமீர் என் மீதும் என் படத்தின் மீதும் வைத்த குற்றச்சாட்டினை இன்னும் மூன்று தினங்களில் நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் தெரிவித்த கருத்தினை பின்வாங்க வேண்டும் என பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜி பேட்டியளித்துள்ளார்.


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களைத் தொடர்ந்து,  மோகன் ஜி இயக்கியுள்ள  படம் பகாசூரன். இயக்குநர் செல்வராகவன், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் பிப்.17 வெளியானது.


அமீர் கடும் விமர்சனம்


இந்நிலையில் பகாசூரன் படத்தை முன்னதாக கடுமையாக விமர்சித்த இயக்குநர் அமீர்,  மோகன் ஜியின் படங்களை ஹெச்.ராஜா, அண்ணாமலை உள்ளிட்டோர் உடனடியாகப் பார்த்து கருத்து சொல்வதாகவும், அசுரன், மெட்ராஸ், காலா, கபாலி படங்களைப் பார்த்து கருத்து கூறுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் வட இந்தியாவைப் போல் ஆரோக்கியமற்ற சூழலை தமிழ்நாட்டிலும் உருவாக்கப் பார்க்கிறார்கள் என்றும் சாடியிருந்தார்.


மோகன் ஜி பதில்


இந்நிலையில் சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த மோகன் ஜி தன் மீது அமீர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். “எனது நான்காவது திரைப்படமான பகாசூரன் இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, நிறைய நல்ல கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.


அதே சமயத்தில் இயக்குனர் அமீர் பகாசூரன் படத்தை பார்க்காமல் தவறான கருத்தை தெரிவித்து வருகிறார்.
படம் திரையங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது இதுபோன்று கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். நான் யாரிடமும் பணம் வாங்கி இந்தப் படத்தை இயக்கவில்லை.


கடன் வாங்கி படம் எடுத்தேன்


கடன் வாங்கி தான் படத்தை இயக்கி இருக்கிறேன். நான் வெளியே 2 பேரிடம் பணம் கடன் வாங்கி தான் படம் எடுத்துள்ளேன். படத்துக்கு நானே தான் தயாரிப்பாளர். நான் எந்தக் கட்சியை சார்ந்தவர்களிடமும் பணத்தை வாங்கி படம் எடுக்கவில்லை.


இயக்குனர் அமீர் இது போன்ற பெரிய தவறான குற்றச்சாட்டினை வைக்க வேண்டாம்.  நான் வன்னியர் சாதியை முன்வைத்து, இந்து மதத்தை முன்வைத்து எடுத்த படத்தினை திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தான்  பாமக தலைவர் அன்புமணி மற்றும் ஹெச் ராஜா பார்க்க வேண்டும் என நினைத்தேன்.


 இந்த பகாசூரன் படத்தினை அனைவரையும்  பார்க்க தான் அழைக்கிறேன், ஆனால் தேவை இல்லாமல் படத்தைப் பார்க்காமல் தவறான கருத்துக்களை கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.


மேலும் இன்னும் மூன்று நாட்களில் அமீர் தனது கருத்தினை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் ,இல்லையெனில் உரிய ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்” என்றார்.


திரௌபதி அப்படி எடுத்தேன்


தொடர்ந்து பேசிய அவர் பகாசுரன் படத்தில், நான் பெண்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது போல தவறான கருத்தினை பதிவு செய்து வருகின்றனர். பகாசுரன் படத்தினை ஒரு மாநிலத் தலைவராகவும் தேசிய கட்சியை சார்ந்தவருமான அண்ணாமலை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பகாசூரன் படத்தில் நான் இந்துத்துவவாதத்தையும் சாதியையும் வைத்து படம்  எடுக்கவில்லை. திரௌபதி படத்தில் தான் சாதியை முன் வைத்து எடுத்தேன்.  பகாசுரன் பெற்றோருக்கான பெண் குழந்தைகளுக்கான சிறந்த படம்.


நான் சொல்வதை மட்டும் கருத்தாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத தவறான கருத்து பதிவுகளை யாரும் பரப்ப வேண்டாம்.  நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லவே நான் கடன் வாங்கி படம் எடுத்து அதிகம் கஷ்டப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.