ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில், தனது சந்தா கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. கூடுதல் சந்தாதாரர்களை கவரும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டணம் குறைப்பு:
கூடுதல் சந்தாதாரர்களை கவரும் விதமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் கட்டணத்தை குறைத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையின்படி, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, சப்-சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் பரவியுள்ள நாடுகளில் கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் 20 சதவிகிதம் முதல் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டு உள்ளதாகவும், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு விலை குறைப்பு உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கட்டணம் குறைப்பா?
கட்டணம் குறைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா, ஈரான், கென்யா, குரோஷியா, ஸ்லோவேனியா, பல்கேரியா, நிகரகுவா, ஈக்வடார், வெனிசுலா, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 12 நாடுகளில் குறைந்த விலை புதிய சந்தா திட்டங்களையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த பட்டியலில் துரதிருஷ்டவசமாக இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை.
எவ்வளவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது?
உதாரணமாக மலேசியாவில் 653 ரூபாயாக இருந்த மாத கட்டணம், தற்போது 523 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது பயனாளர்களுக்கான மாத கட்டணம் சுமார் 120 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாறுபட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ்:
உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. அவர்களை கவரும் விதமாக புதுப்புது தொடர்கள் மற்றும் படங்களுடன், வருடம் மற்றும் மாதம் என பல்வேறு விதமான சந்தா திட்டங்களும் இந்த தளத்தில் வழங்கப்படுகின்றன.
பாஸ்வேர்டை பகிரும் பிரச்னை:
அவ்வாறு சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனாளர்கள் வீடியோக்களை பார்த்தாலும், பயனாளரின் பாஸ்வேர்டை பயன்படுத்தி மற்றவர்கள் தங்களது சாதனங்களில் நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை பார்ப்பது தொடர்ந்து அதிகரித்தது. ஒரே கணக்கிற்கு இரண்டு பேர் சேர்ந்து சந்தா செலுத்தி அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையில், ஒரே நெட்பிளிக்ஸ் கணக்கு பலரால் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் 10 கோடிக்கும் அதிகமானோர் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதால், கடந்தாண்டு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
புதிய நடைமுறை:
அதன்படி, ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஷ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கட்டணத்தை குறைத்துள்ளது.