நண்பகல் நேரத்து மயக்கம் படக்குழு மீது சில்லு கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் வைத்திருக்கும் பகிரங்க குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 


சில்லு கருப்பட்டி இயக்குநர் குற்றச்சாட்டு


தனது ஏலே படத்தின் காட்சிகளைப் போலவே பல காட்சிகள் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏலே பட்த்துக்காக தான் தயார் செய்து வைத்திருந்த பல விஷயங்கள் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் களவாடப்பட்டிருப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை இயக்குநர் ஹலிதா ஷமீம் முன்வைத்துள்ளார்.


கோலிவுட்டில் பூவரசம் பீப்பி, சில்லு கருப்பட்டி படங்களின் மூலம் கவனமீர்த்து குறிப்பிடத்தக்க பெண் இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தவர் ஹலிதா ஷமீம்.


2021ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் ’ஏலே’. நகைச்சுவை ஜானரில் உருவான இந்தப் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போய் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் பாசிட்டிவ்வான விமர்சங்களை அள்ளியது.


நண்பகல் நேரத்து மயக்கம்


இந்நிலையில் மலையாள சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில்,  தமிழ் - மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான நண்பகல் நேரத்து இயக்கம் படத்தின் மீது  ஹலிதா ஷமீம் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மம்மூட்டியின் நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. குறிப்பாக மம்மூட்டியின் நடிப்பும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு பாராட்டுகளை அள்ளி வருகிறது. 


இச்சூழலில் ஏலே படத்துக்காக தான் பார்த்து வைத்த பல விஷயங்கள் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் வந்திருப்பதாகவும், தனது படத்தின் அழகியல் திருடப்பட்டிருப்பதாகவும் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.


’ஏலே படத்தில் களவாடப்பட்டுள்ளது’


”‘ஏலே' படத்துக்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்புக்காக தயார் செய்து முதன்முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. 


இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்தப் படம் நெடுக களவாடப்பட்டிருப்பது சற்றே அயற்சியை தருகிறது.  ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை.


Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.


படமாக்கப்பட்ட வீடுகள்,பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன்.


நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு
சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன! எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன். 


என்னுடைய ஏலே படத்தை நீங்கள் நிராகரிக்கலாம்,  ஆனால் அதிலிருந்து கருத்துக்கள் மற்றும் அழகியலை இரக்கமின்றி கிழித்தெறிந்தால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்” என தன் ஃபேஸ்புக் பதிவில் ஹலிதா தெரிவித்துள்ளார்.


மேலும், ஏலே படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், தேனி ஈஸ்வர் மீதும் ஹலிதா வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.