மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரெளபதி 2 படத்தின் பாடலை பாடியதற்கு பின்னணி பாடகி சின்மயி மன்னிக்கு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து தற்போது மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்
திரெளபதி 2 பாடலால் சர்ச்சை
மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் திரௌபதி 2 படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் ‘எம்கோனே’ நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை சின்மயி பாடியதை ரசிகர்கள் பலர் விமர்சித்து இருந்தனர். சாதிய பெருமிதம் பேசும் மோகன் ஜி படங்களின் கருத்தியலை சின்மயி ஆதரிக்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து திரெளபதி 2 பாடலை பாடியதற்காக சின்மயி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.
“விளம்பர ஜிங்கிள்கள் பாடிய நாட்களிலிருந்து கடந்த 18 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரின் அலுவலகத்திலிருந்து இந்தப் பாடலுக்கு அழைப்பு வந்ததால், வழக்கம்போல் சென்று பதிவு செய்தேன். அப்போது ஜிப்ரான் அங்கே இல்லை என நினைக்கிறேன் — பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யாரோ ஒருவர் ஒரு கருத்து மட்டும் தெரிவித்தார். நான் பதிவு செய்து வெளியேறினேன். படத்தின் உள்ளடக்கம் குறித்து எனக்கு முன்பே தெரிந்திருந்தால், எனது கொள்கைக்கு முழுமையாக முரண்படுவதால் நான் இதை ஒருபோதும் பாட முடியாது. இதுவே உண்மை,” என்று தனது எக்ஸ் பதிவில் சின்மயி தெரிவித்திருந்தார்.
சின்மயி மீது விமர்சனம்
சின்மயி மன்னிப்பு கேட்டிருந்தாலும் இந்த சர்ச்சை குறித்து பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஒரு பாடலை பாடும் போது படத்தின் இயக்குநர் என்று தெரியாமலா பாடுவீர்கள் என சிலர் கேள்வி எழுப்பினர். இன்னொரு பக்கம் சின்மயி ஒரு பாடகர். அவர் ஒரு படத்திற்காக பாடுவது என்பது அந்த படத்தின் இயக்குநரின் அரசியல் கருத்தியலை ஆதரிப்பதாக ஆகாது என்றும் சிலர் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மோகன் ஜி பதில்
சின்மயி மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை குறித்து மோகன் ஜி தற்போது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " எல்லாருக்கும் வணக்கம். திரெளபதி 2 படத்தின் பாடலை ஜிப்ரான் இசையில் வெளியிட்டிருந்தோம். இந்த பாடலை சின்மயி குரலில் பாட வேண்டும் என்று நான் தான் கேட்டுக்கொண்டேன். ரொம்ப நாட்களாக நான் சின்மயி ரசிகன். நேற்று பாடல் வெளியானபோது அதில் சின்மயி மேடமின் வீடியோ இருந்தது. இதனைப் பார்த்ததும் ஒரு சிலர் சின்மயி மேடமை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். நான் நினைத்தது போல சின்மயி இந்த பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டார். அவர் எங்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நான் எப்போதும் கடவுள் இருக்கு என்று சொல்கிறவன். எனக்கு தெரிந்தும் சின்மயி மேடமும் கடவுள் மறுப்பாளர் கிடையாது. அவரது பெயரிலேயே ஶ்ரீபாதா என்கிற வார்த்தை இருக்கிறது. கொள்கை ரீதியாக அவரும் நானும் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்கிற எனக்கு தெரியவில்லை. நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். யார் கொடுத்த அழுத்தத்தால் நீங்கள் இந்த மன்னிப்பு கேட்டீர்கள். நான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதைப் போல் நீங்கள் என்னை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். உங்களது பதிவு இந்த படத்தை வியாபார ரீதியாக பாதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் விளக்கம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் பதிவை நீங்கள் நீக்கவேண்டும்" என மோகன் ஜி வீடியோ வெளியிட்டுள்ளார்