நடிகரும், ஊடகவியலாளருமான பயில்வான் ரங்கநாதன், தான் சபரிமலைக்கு செல்லப் போகிறேன் என சொன்னபோது மறைந்த நடிகர் நம்பியார் தன்னை திட்டிய தருணத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துக் கொண்டார்.
ஒரு நேர்காணலில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “ஒரு நாள் காலையில் குளித்து முடித்து விபூதி, குங்குமம், சந்தனம் எல்லாம் வைத்துக் கொண்டு நம்பியார் சாமியை சந்தித்து நான் ஐயப்பன் மலைக்கு போறேன் சார் என சொன்னேன். அவர் முன்னால் போய் நின்றதும் என்னைப் பார்த்து, ‘யோவ் என்னப்பா இது கோலம்?’ என கேட்டார். நான் ஐயப்பன் மலைக்கு போறேன் என கூறினேன். உடனே டென்ஷனான நம்பியார், ‘உன்னை யாரு ஐயப்பன் மலைக்கு போக சொன்னது? .. நீங்களாம் போறதால தான் ஐயப்பன் சபரிமலையை விட்டே ஓடி போறான்’ என கூறினார். அவர் இதை சிரித்துக் கொண்டே தான் சொன்னார்.
அப்படி நம்பியார் சொல்ல காரணம், ‘சினிமாக்காரர்களால் பொதுவாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டால் விரதம் இருக்க முடியாது. ஏனென்றால் காலை 9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள். மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங் செல்லும். மாலையில் குளித்து விட்டு கோயிலுக்கு போயிட்டு தான் சாப்பிடணும் என விரத நடைமுறைகள் உள்ளது. அதேபோல் ஷூட்டிங்கில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இருக்கும் என்பதால் தான் நம்பியார் சாமி அப்படி சொன்னார்.
ஆனால் நான் அப்படி கிடையாது. எனக்கு முதன்முதலில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவித்தவர் வெங்கட்ராம ஐயர் என்பவர் தான். அவர் அசைவம் சாப்பிட மாட்டார். அவர் தான் என்னிடம் நாம் ஐயப்பன் மலைக்கு மாலை போடலாம் என கூறினார். அப்போது என்னிடம் 3 நாட்கள் மட்டுமே விரதம் இருக்க சொன்னார். நான் எப்படி அது சாத்தியம், 48 நாட்கள் இருக்க வேண்டும் என சொல்வார்களே என தெரிவிக்க, யார் சொன்னா உன்னிடம் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என திரும்ப கேட்டார். ஐயப்பனை மனதில் நினைத்துக்கொள், அதுதான் எல்லாத்துக்கும் காரணம் என சொன்னார். அப்படியாக 3 நாட்கள் விரதமிருந்து தான் நான் முதன் முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றேன்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான நம்பியார், ஐயப்ப பக்தர்களிடையே குருசாமி என அழைக்கப்படுகிறார். அவர் ஐயப்பனுக்காகவே வாழ்ந்த மகான் என அழைக்கப்படுகிறார். 1942ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சபரிமலைக்கு சென்ற அவருடன், பக்தி பாடகர் வீரமணி ராஜூ போன்றோரும் பயணித்துள்ளனர். அவருடன் சேர்ந்து இந்திய சினிமாவைச் சேர்ந்த பலரும் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.