சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே படுத்திருந்த நபரை தாக்கி பணப்பையை திருடிக் கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Continues below advertisement

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு விதமான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் எப்போதும் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்படும். இங்கு நோயாளிகளை அழைத்து வரும் குடும்பத்தினரில் சிலர் மருத்துவமனை வளாகம், அருகில் இருக்கும் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருப்பதும், தங்குவதும் வழக்கம். 

இந்த நிலையில் நவம்பர் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை அருகில் உள்ள நடைபாதையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் என்பவர் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 ஆண்டுகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேரும் அவரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என நிர்மல் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இதனையடுத்து அந்த 3 பேரும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிர்மலை விமர்சித்துள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என எவ்வளவோ சொல்லியும் நிர்மலை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அந்த மூன்று பேரில் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆதார் அட்டை அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மல் குமால் உடனடியாக புரசைவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர் தூங்கிய பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். பின்னர் புரசைவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது. 

இதனடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி செம்மஞ்சேரியைச் சேர்ந்த பரமேஸ்வரன், வால் டாக்ஸ் சாலையில் நடைபாதையில் இருந்த ஜெகன், மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி பிரியா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரின் பணப்பையை போலீசார் மீட்டு நிர்மலிடம் ஒப்படைத்தனர். மிரட்ட பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரமேஸ்வரன் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கொள்ளை, திருட்டு, மிரட்டி பணம் பறித்தல் என 16 வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது. அவரது மனைவி பிரியா மீது கொலை உள்ளிட்ட 3 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல்துறையினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.