பிரதமர் மோடி இறங்கி வந்து விஷமத்தனமான கருத்துகள் பரவுவதை நிறுத்த வேண்டும் என்று பிரபல நடிகர் நசீருதின் ஷா வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, எதிர்தரப்பு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி முகமது நபி பற்றி மோசமாக விமர்சனம் செய்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. அதே போல நவீன் குமார் ஜிண்டாலின் பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற, இஸ்லாமிய நாடுகள் பாஜக நிர்வாகியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.
15-க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்ப்பு:
குவைத், கத்தார், ஈரான், ஈராக், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான், ஆஃப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சம்மன அனுப்பியதோடு, மன்னிப்பும் கேட்க வலியுறுத்தின. இந்த விவகாரத்தில் இந்தியா தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தாலும், பாஜக செய்தி தொடர்பாளரின் பேச்சு இந்நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் முன்வர வேண்டும்:
இது தொடர்பான எண்டிடிவி விவாதத்தில் நடிகர் நசுருதீன் ஷா கலந்து கொண்டு தனது கருத்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இந்த மக்களுக்கு நல்ல புத்தியைத் தட்டி எழுப்புமாறு பிரதமரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர் ஹரித்வார் தர்ம சன்சத்தில் சொன்னதை நம்பினால், அவர் அதைச் சொல்ல வேண்டும், இல்லை என்றாலும் அவர் அதைச் சொல்ல வேண்டும். ட்விட்டரில் பிரதமர் பின் தொடரும் வெறுப்பாளர்களுக்கு பிரதமர் சிலவற்றை செய்யவேண்டும். அது விஷம் வளராமல் தடுக்க அவர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
முகமது நபிக்கு எதிராக நுபுர் ஷர்மா சொன்ன மோசமான கருத்தை சமூக விரோதிகளின் கருத்து என்று பாஜக கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த நசீருதின், அந்த பெண் சமூக விரோதி இல்லை. அவர் தேசிய செய்தித் தொடர்பாளர் என்று கூறினார். இந்து கடவுளான சிவன் குறித்து அவதூறாக பேசியதாலேயே அப்படி பேசியதாக நுபுர் சர்மா அளித்த விளக்கத்திற்கு பதிலளித்த நசிருதீன் ஹிந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை எந்த இஸ்லாமியர் சொன்னார் என்று என்னால் நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை என்று கூறினார். அவர் கூறியது ஒரு நேர்மையற்ற மன்னிப்பு, புண்படுத்தப்பட்ட உணர்வுகளைத் தணிக்க முடியாது. அமைதி, ஒற்றுமை என்று பேசி ஓராண்டு சிறைக்கு அனுப்புகிறீர்கள். நீங்கள் இனப்படுகொலை பற்றி பேசுகிறீர்கள். இங்கு இரட்டை நிலைப்பாடுகள் உள்ளன என்று 1984 ஜார்ஜ் வெல்லை மேற்கோள்காட்டி நசிருதீன் பேசினார்.
”பாகிஸ்தானை பின்பற்ற வேண்டியதில்லை”:
நுபுர் ஷர்மாவிற்கு கொலை மிரட்டல்கள் வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த செயல்கள் கண்டிக்கப்படவேண்டியவை என்றார். மேலும் இது போன்று இந்த வழியில் நினைப்பதே தவறு. அதனால் தான் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இந்த நிலையில் இருக்கின்றன. இந்த நாடுகளை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் நாம் சிலவற்றை செய்துகொண்டிருக்கின்றோம். பசுக்கள் வதை செய்யப்படுவதான எழும் சந்தேகத்தின் அடிப்படையில் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதுபோன்ற செயல்கள் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமிய நாடுகளில் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவில் இல்லை என்று கூறினார்.
இதுபோன்ற விஷம கருத்துகள் உருவாவதற்கு செய்திச் சேனல்களும், சமூக வலைதளங்களும் தான் பொறுப்பு என்று அவர் குற்றம்சாட்டினார்.