முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது.



மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை முதன்முறையாக நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர், கலைஞர் நினைவு நூலகத்தை பார்வையிட்டப்பின் தும்பைப்பட்டியில் தனியார் விடுதியில் தங்கினார். இன்று அதிகாலை சிங்கம்புணரியில் கட்டிமுடித்து கிடப்பில் போடப்பட்ட பெரியார் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார்.

 




அதன் பின்னர் சிவகங்கை காரையூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சிவகங்கையின் பெருமைகளை அடுக்கினார். தொடர்ந்து பேசிய முதல்வர், “பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்க 2010-11 நிதியாண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், தான் நம்முடைய (திமுக) அரசு அமைந்ததற்கு பிறகு அந்த சமத்துவபுரம் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு, சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த அதிமுக அரசு, மக்களுக்கான திட்டங்களை எப்படியெல்லாம் பாழ் படுத்தியது என்பதை இந்த விழாவை சாட்சியாக வைத்து நீங்கள் பார்க்கலாம். கடந்த ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சியாக இருந்ததால் தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்.



திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். செல்லும் இடமெல்லாம் வழி எங்கும் மக்கள் மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் இருப்பதை பார்க்கும் போது, அது தான் இந்த ஆட்சிக்கும், எனக்கும் கொடுக்கக்கூடிய நற்சான்று என்பதை பார்க்கிறேன். தேர்தலுக்கு முன்னாள் எப்படி மக்களை சந்தித்தேனோ அதை விட அதிகமாக ஆட்சிக்கு வந்தபின் சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன். மக்களை தொடர்ச்சியாக சந்திப்பது ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்காக நான் கருதுகிறேன்.



அண்மையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை கலைஞரின் சிலையை திறப்பதற்காக தமிழகம் அழைத்தோம். அவர், நம்முடைய ஆட்சியை பாராட்டி, கலைஞரை போல திறமையாக ஆட்சி செய்கிறேன் என்று கூறியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன். கலைஞரின் இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று கூறவில்லை, அவரது இடத்தை யாராலும், எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது. ஆனால், அவரை போல செயல்படுத்தி காண்பித்து இருக்கிறேன். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை இந்த ஒரு ஆண்டில் செய்திருக்கிறேன். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை விமானநிலையம் மூலம் சென்னை செல்கிறார்.