Dadasaheb Phalke Award:  இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு, மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விழாவில், மிதுன் சக்ரவர்த்திக்கு இந்த விருதினை வழங்கி மத்திய அரசு கவுரவிக்க உள்ளது. தமிழில் ஆதி நடிப்பில் வெளியான ”யாகாவராயினும் நா காக்க” திரைப்படத்தில் இவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


தாதா சாகேப் பால்கே விருது:


தாதா சாகேப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக் கருதப்படும், தாதா சாகேப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு இந்த விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான், அண்மையில் பத்மபூஷன் விருது பெற்ற மிதுன் சக்ரவர்த்திக்கு, மேலும் ஒரு கவுரவமாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.






யார் இந்த மிதுன் சக்ரவர்த்தி?


ரசிகர்களால் ”மிதுன் டா” என வாஞ்சையுடன் அழைக்கப்படும் மிதுன் சக்ரவர்த்தி, கடந்த 1976ம் ஆண்டு வெளியான மிரிகயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமுதல் தனது பன்முக நடிப்பால் அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சாந்தால் ரெபல் எனப்படும் புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தனது முதல் படத்திலேயே தேசிய விருது வென்று கவனம் ஈர்த்தார். அதைதொடர்ந்து 1992 மற்றும் 1998ம் ஆண்டு வெளியான, தஹதர் கதா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகிய திரைப்படங்களுக்கும் தேசிய விருது வென்றார்.


அக்னிபத், முஜே இன்சாஃப் சாஹியே, ஹம் சே ஹை ஜமானா, பசந்த் அப்னி அப்னி, கர் ஏக் மந்திர் மற்றும் கசம் பதன் வாலே ஆகியவை அவரது மறக்கமுடியாத படங்களில் அடங்கும்.  கடந்த 48 ஆண்டுகளில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் மிதுன் நடித்துள்ளார்.


நடிப்பையும் தாண்டி காலத்தை கடந்து கொண்டாடப்படும் ஜிம்மி ஜிம்மி மற்று சூப்பர் டான்சர் போன்ற பாடல்களில், துள்ளலான நடனத்தையும் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். கடைசியாக விவேக் அக்னிஹோத்ரியின் நடிப்பில் வெளியாக சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹிட் அடித்த தி காஷ்மிர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.