எப்போதெல்லாம் ஹாலிவுட் திரையுலகம் ஒரு பெரிய நெருக்கடியை சந்தித்து வந்திருக்கிறதோ அப்போதெல்லாம் டாம் க்ரூஸ் தனது மிகப்பெரிய வசூல் ஈட்டியத் திரைப்படங்களால் ஹாலிவுட்டை காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த நிலை இப்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டின் கடைசி ஆக்ஷன் ஹீரோ என்று அழைக்கப்படும் டாம் க்ரூஸ் சரிந்து வரும் ஹாலிவுட் பாக்ஸ் ஆஃபிசை மீண்டும் ஒரு முறை தூக்கி நிறுத்துவாரா?
தொடர் தோல்விகளை சந்திக்கும் ஹாலிவுட்
இந்த கோடையில் வெளியான மூன்று ஹாலிவுட் திரைப்படங்கள் த ஃபிளாஷ், டிரான்ஃபார்மர்ஸ், மற்றும் இண்டியான ஜோன்ஸ் ஆகிய மூன்று படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளன. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படங்கள் எதிர்பார்த்த வசூலை தரவில்லை. தற்போது மொத்த ஹாலிவுட் திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருப்பது டாம் க்ரூஸ் நடிப்பில் இன்று வெளியாக இருக்கு மிஷன் இம்பாசிபள் படத்தின் 7-ஆம் பாகத்தை. ஆனால் டாம் இதுவரையில்லாத அளவு சுமை டாம் க்ரூஸின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
டாம் க்ரூஸ் என்னும் பந்தயக் குதிரை
டாம் க்ரூஸ் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் மிஷன் இம்பாசிபள் படம் சுமார் 290 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மிஷன் இம்பாசிபள் படத்தின் முந்தைய பாகமான ஃபால் அவுட் படத்தைவிட இரு மடங்கு அதிக பட்ஜட். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதே இதற்கு முக்கிய காரணம். மேலும் இந்தப் படத்தின் விளம்பரத்திற்கு பல லோடிகளை செலவிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமெளண்ட் நிறுவனம். இந்நிலையில் மிஷன் இம்பாசிபள் படம் உலகளவில் குறைந்தது 800 மில்லியன் டாலர்களை வசூல் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கூடுதலாக படத்தின் ஒட்டுமொத்த வசூலில் பெரிய அளவிலான ஒரு தொகை டாம் க்ரூஸுக்கு வழங்கப்படுவது வழக்கம் என்பதால் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் ஈட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்வளவு பெரிய இலக்கை ஒருவர் தொடமுடியும் என்றால் அதற்கு டால் க்ரூஸுக்கு நிகரான வேறு நடிகரும் ஹாலிவுட்டின் இல்லை என்பது ஒரு உண்மை.
சவால் விடும் ஓப்பன்ஹைமர்
இந்த இலக்கை அடைவதற்கு ஒரே தடையாக இருப்பது அடுத்த வாரம் வெளியாக இருக்கும் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஒப்பன்ஹைமர் திரைப்படம். ஐ மேக்ஸில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் அனைத்து ஐ மேக்ஸ் திரையரங்குகளையும் முன்பதிவு செய்துள்ளது. மற்ற சாதாரண திரையரங்குகளில் இருந்து வரும் வசூலைவிட ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வரும் வசூல் சற்று அதிகமானது என்பதால் மிஷன் இம்பாசிபள் படத்தின் வசூல் சாதனையை அது பாதிக்குமா? என்கிற கேள்வி நிலவி வருகிறது. டாம் க்ரூஸுக்கு இது ஒரு பலப்பரீட்சைதான்.